உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியிருப்பது சுயநலத்தின் உச்ச கட்டம் என்றும், குழப்பமான மனநிலையின் வெளிப்பாடு என்றும் ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியிருப்பது சுயநலத்தின் உச்ச கட்டம் என்றும், குழப்பமான மனநிலையின் வெளிப்பாடு என்றும் ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவையும் , உலக சுகாதார நிறுவனத்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த வைரஸை சீனாவிலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்றும், ஆரம்பத்திலேயே இந்த வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்க சீனா தவறி விட்டது என்றும் , உலகில் ஏற்பட்டு வரும் பேரழிவுக்கும் சீனாதான் காரணம் என்றும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். அதே நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ கொரோனா வைரஸ் சீனா ஆய்வு கூடத்தில் தயாரிக்கப்பட்ட வைரஸ் என்றும் , சீனா வேண்டுமென்றே இந்த வைரசை பரப்பியது என்றும் , அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் நிறையவே உள்ளது என்றும் அவர் கூறி வருகிறார்.
ஆனால் இதுவரை எந்த ஆதாரத்தையும் அமெரிக்கா வெளியிடவில்லை. அதே நேரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறியவரும் ட்ரம்ப் அதற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தி வைத்துள்ளார். மேலும் அடுத்த 30 நாட்களுக்குள் உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்படா விட்டால் , அதாவது சீனாவில் சுதந்திரமானஒரு விசாரணை நடந்துவதற்கு அதை நிர்பந்திக்கும் வகையில் குறிப்பிடதக்க நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ள நிதியை முழுவதுமாக நிறுத்த நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார் . இந்நிலையில் பல உலக நாடுகள் , நிதி நிறுத்திவைத்துள்ள விவகாரத்தில் அமெரிக்கா தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன . இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் முடிவை ரஷ்ய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இது மிகவும் 'சுயநலம் மற்றும்' குழப்பமான 'நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அதன் மீதான தாக்குதலை அமெரிக்கா உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ரியாப்கோவ் அமெரிக்காவை எச்சரித்துள்ளார். மேலும் , முழு உலகமும் உலக சுகாதார அமைப்பை நம்பியிருக்கும் நேரத்தில் அதன்மீதான அமெரிக்காவின் தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது என்றும் ரியாப்கோவ் கூறியுள்ளார். இதேபோல் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவாவும் அமெரிக்கா மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதாவது வாஷிங்டனில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்த மட்டுமே தெரியும். கோவிட்-19 க்கு சீனா மற்றும் WHO மீது அவர்கள் குற்றம்சாட்டுவதும் இப்படித்தான் . ஹிலாரி கிளிண்டன் தோற்ற போது அவர்கள் ரஷ்யாவை குற்றம் சாட்டினார்கள் , அமெரிக்க மருத்துவத்தில் உள்ள சிக்கல்களுக்கு புடினை குற்றம் சாட்டுவார்கள் என ஜாகரோவா அமெரிக்காவை கடுமையாக கிண்டல் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற உலக சுகாதார சபையில் கொரோனா நோய் தாக்கம் மற்றும் வைரஸ் உருவானது மற்றும் அதை கையாண்டது குறித்து நடுநிலையான மற்றும் சுதந்திரமான ஒரு விசாரணை கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்த நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது.