
உக்ரைனின் முக்கிய நகரமான கார்கீவ்வை முழுமையாக கைப்பற்ற ரஷ்ய படையினர் தொடந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,இந்தியர்கள் அனைவரும் அங்கிருந்து நடந்தாவது வெளியேறுங்கள் என்று இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகம் இன்று மூடப்பட்ட நிலையில் கார்கீவ் நகரைவிட்டு இந்திய நேரப்படி 9.30 மணிக்குள் இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ,ரஷ்யா மீது உக்ரைன் போர் தொடுத்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் உக்ரனைவிட்டு வெளியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தூதரகத்தின் அறிவுறுத்தலின் படி, ஏறத்தாழ 17,000 பேர் உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு வெளியேறியுள்ளனர் என்றார்.
இந்திய விமானபடையின் சி-17 விமானமும் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் இணைந்துள்ளனர். ரோமானியாவிலிருந்து முதல் விமானப்படை விமானம் இன்று நள்ளிரவு டெல்லி வரவுள்ளன. மேலும் 3 விமானங்கள் இன்று கிளம்பவுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரமான, கார்கீவ் தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதால் அங்குள்ள இந்தியர்களை வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், அங்கிருந்து நேற்றிரவு, இன்று காலை சில மாணவர்கள் ரயில்கள் மூலம் வெளியேறியுள்ளனர் என்று பேசினார்.
மேலும் பாஸ்போர்டை தவறவிட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க குழுக்களை அனுப்புவது குறித்து அலோசித்து வருகிறோம் என்று கூறினார். இதனிடயே இரயில் நிலையங்களில் வாகனங்கள் இல்லாமல் காத்திருக்கும் மாணவர்கள் உடனடியாக நடத்தாவது கார்கீவ் நகரிலிருந்து வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்து மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். கார்கீவ் நகரிலிருந்து வெளியேற முயற்சித்த போது இரயில்களில் ஏற இந்திய மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அங்குள்ள மாணவர்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த மாணவர்களை இரயில், பேருந்தில் ஏறவிடாமல் உக்ரைன் காவலர்கள் தடுப்பதாகவும் அவர்கள் நாட்டை சேர்ந்தவர்களுக்கே முன்னூரிமை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் எல்லையை கடக்க யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை தவிர, நிற மற்றும் இனப்பாகுபாடு காட்டப்படவில்லை என்று உக்ரைன் அரசு விளக்கமளித்துள்ளது.