உக்ரைனில் ஏராளமான இந்திய மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளைப் படித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தொடர்ந்து தாய் நாடு திரும்பி வருகின்றனர்.
உக்ரைனிலிருந்து தப்பிபதற்காக பாகிஸ்தானியர்களும் துருக்கியர்களும் இந்திய தேசியக் கொடியை ஏந்தி எல்லைக் கடந்த நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. வான் வழி, கடல் வழி, தரை வழி என மும்முனை தாக்குதலை ரஷ்யா நடத்துவதால் உக்ரைனில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக உக்ரைன் நாட்டின் ராணுவ இலக்குகளை குறி வைத்து ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகின்றன. மிகப் பெரிய நாடான ரஷ்யாவின் இந்தத் தாக்குதலிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உக்ரைனில் ஏற்பட்டுள்ள் உச்சக்கட்ட பதற்றத்தால், அங்குள்ள வெளிநாட்டவர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். மேலும் தங்கள் நாட்டவர்களை அங்கிருந்து மீட்கும் முயற்சிகளில் பல நாடுகளும் இறங்கியுள்ளன. மேலும் உக்ரைன் அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து தங்களுடைய சொந்த நாடுகளுக்கு ஏராளமானோர் சென்று வருகிறார்கள். இதனால், உக்ரைன் நாட்டு எல்லையில் கால் நடையாக செல்லும் வெளி நாட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. உக்ரைனில் ஏராளமான இந்திய மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளைப் படித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தொடர்ந்து தாய் நாடு திரும்பி வருகின்றனர்.
அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை அறிவித்து, அதன் மூலம் இந்தியர்களை மீட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்தியர்கள் தங்களுடைய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு வெளிவேறி வருகின்றனர். கையில் தேசிய கொடியுடன் வரும் இந்தியர்கள் எளிதில் விரைவாக எல்லைகளைக் கடக்க முடிவதாகத் தெரிகிறது. உக்ரைனில் இந்தியர்கள் சிக்கித் தவிப்பதைப் போலவே பாகிஸ்தான், துருக்கி நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தானியர்களும், துருக்கியர்களும் தங்கள் விடுதிகளிலிருந்து வெளியேற இந்திய தேசிய கொடியை பிடித்துக்கொண்டே ருமேனியா வழியாக புக்கரெஸ்ட் வந்தடைந்தனர்.
அப்படி வந்தவர்கள் இந்தியாவின் தேசியக் கொடியை நாங்கள் கையில் ஏந்தியிருந்ததால், எளிதில் கடந்து வந்ததாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான செய்தியும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளன.