உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. உக்ரைன் அரசு ஐரோப்பாவிற்கு நெருக்கமாகவும், நேட்டோ படைகளுக்கு நெருக்கமாகவும் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனை ரஷ்யா அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்கி வருகிறது. முக்கியமாக மேற்கு உக்ரைன் பரப்பை குறி வைத்து ரஷ்யா தாக்கி வருகிறது. நேற்று இந்திய மாணவர் ஒருவர் இந்த தாக்குதலில் உயிரிழந்தார். இந்த நிலையில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள இயலாமல் இந்திய மாணவர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த மாணவர் சந்தன் ஜின்டால் வின்னிடசியா தேசிய மருத்துவக் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்த மாணவன் பஞ்சாபை சேர்ந்தவர். இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு வின்னிட்சியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். மேலும் இவரது இறுதி சடங்கிற்காக அவரது உடலை இந்திய கொண்டு வர உதவுமாறு ஒன்றிய அரசுக்கு அவரது பெற்றோர்கள் கடிதம் அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார். கார்கிவ் நகரில் இருந்து வெளியேறி ரயில் நிலையம் சென்றபோது ரஷ்ய குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நேற்று உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த நவீன் உயிரிழந்தார்.
மாணவன் இறப்பிற்கு பிரதமர் மோடி அவரது பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். தற்போது உடல் நலக்குறைவு காரமணமாக பஞ்சாபை சேர்ந்த மாணவன் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. கார்கிவ்வில் உள்ள இந்தியர்கள் பெசோஷின், பபாயி உள்ளிட்ட பகுதிகளை நோக்கி சென்று தஞ்சமடைய உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டு நேரப்படி 6 மணிக்குள் கார்கிவ்வை விட்டு வெளியேற இந்தியர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மோதல் நடைபெறும் கார்கிவ் மற்றும் பிற நகரங்களில் உள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.