Russia Ukraine War: உக்ரைனின் முக்கிய நகரமான கார்கீவ்வை முழுமையாக கைப்பற்ற ரஷ்ய படையினர் தொடந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,இந்தியர்கள் அனைவரும் அங்கிருந்து நடந்தாவது வெளியேறுங்கள் என்று இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் குண்டுமழைகளை பொழிந்து வருகிறது. ரஷ்ய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், உக்ரைன் ராணுவத்தின் பலம் மிகக் குறைவாக உள்ளது. இதனால் தங்கள் நாட்டு மக்களை ரஷ்ய ராணுவத்தினருடன் போரிடுமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று, ஆயிரக்கணக்கான மக்கள் துப்பாக்கி ஏந்தி ரஷ்ய படையினருடன் சண்டையிட்டு வருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவை போரில் பெற்றுவிட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன்னால் இயன்ற முயற்சிகள் அனைத்தையும் விடாமல் மேற்கொண்டு வருகிறார். கார்கிவ் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 112 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பாதுகாப்புத்துறை, உளவுத்துறை கட்டடங்கள் அருகேயுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற ரஷ்யா நேற்றே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. உக்ரைனுடனான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்க உள்ளபோதும் கூட ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது
மேலும் உக்ரைன் பிற நாடுகளிடமிருந்து அணு ஆயுதங்கள் வாங்குவதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் மூன்றாம் உலக போரின் போது ஏற்படும் அழிவு மிக மோசமானதாக இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். ரஷ்யாவுடன் உக்ரனை பேச்சுவாரத்தை நடத்தவிடாமல் அமெரிக்கா தடுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
கார்கீவ் நகரில் தொடந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்கு உக்ரைனுக்கான இந்திய தூதரகம் புதிய உத்தரவுகளை போட்டுள்ளது. அதன்படி, கார்க்கீவ் நகரில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்குள் நடந்தாவது அங்கிருந்து வெளியேறுங்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய படையினரின் இராணுவ தாக்குதலுக்கு உள்ளாகி வரும் கார்க்கீவ் நகரிலிருந்து உடனடியாக வெளியேறி, பெசோசின்,பாஃபாயி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பேருந்து ,இரயில் வசதி இல்லை என்றாலும் கூட நடந்தாவது வெளியேறுமாறு தூதகரம் எச்சரித்துள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரமான கார்கீவ்- யை முழுமையாக கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.