Russia Ukraine Crisis: உக்ரைன் பிற நாடுகளிடமிருந்து அணு ஆயுதங்கள் வாங்குவதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் மூன்றாம் உலக போரின் போது ஏற்படும் அழிவு மிக மோசமானதாக இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் 7 வது நாளாக ரஷ்யாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் உக்ரைன் கடும் சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பான முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் போன்ற இடங்களில் ரஷ்ய ராணுவம் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. காவல்துறை அலுவலகம், தொலைக்காட்சி கோபுரம் போன்ற முக்கிய இடங்களின்மீதும் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு உக்ரைனிலுள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்திருக்கிறது.
கார்கிவ் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 112 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பாதுகாப்புத்துறை, உளவுத்துறை கட்டடங்கள் அருகேயுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற ரஷ்யா நேற்றே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.உக்ரைனுடனான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்க உள்ளபோதும் கூட ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது
கடந்த 7 நாட்களாக நடந்து வரும் போரில் சுமார் 6,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மீது தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரட்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.முன்னதாக, உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 64 கிலோமீட்டர் தூரத்துக்கு ரஷ்ய ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் தெரியவந்துள்ளது. இதனால், கீவ் பகுதியில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அணு ஆயுதங்கள் வழங்க சில நாடுகள் முன்வந்துள்ளனர். இதனிடையேஉக்ரைன் பிற நாடுகளிடமிருந்து அணு ஆயுதங்கள் வாங்குவதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் மூன்றாம் உலக போரின் போது ஏற்படும் அழிவு மிக மோசமானதாக இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவுடன் உக்ரனை பேச்சுவாரத்தை நடத்தவிடாமல் அமெரிக்கா தடுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.