Russia Ukraine Crisis: ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடச்சியாக பொருளாதார தடைகள் விதித்தால் அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்று பெலாரஸ் அதிபர் எச்சரித்துள்ளார்.
நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய, ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு நேட்டோ அமைப்பில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல், உக்ரைனில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்று பல ரூபங்களில் ஆபத்து வந்துவிடும் என்று ரஷ்யா கருதுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது, ரஷ்யா வான்வெளி மற்றும் தரை வழி தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 5 வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய படையினர். குறிப்பாக தலைநகர் கீவ்-யில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது.
உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் அயர்லாந்து, இத்தாலில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான்பரப்பில் ரஷ்யா விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை நீக்கியது ரஷ்யா.
இந்நிலையில் பெலாரஸ் நாட்டில் உக்ரைந் ரஷ்யா தரப்பினரிடையே போர் நிறத்தம் குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதில், உடனடியான போர்நிறுத்தம் தான் பேச்சுவார்த்தைக்கான தங்கள் இலக்கு என்று உக்ரைன் உறுதிபடக் கூறியுள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது, ஐரோப்பிய யூனியனை காரணம் காட்டி ரஷ்ய எல்லையில் ஐரோப்பிய நெருங்கி வருவதை ஏற்க முடியாது எனவும், இதற்கு உக்ரைன் காரணமாக இருக்கக்கூடாது எனவும் ரஷ்யா உறுதியாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், நிதியுதவி தரப்படும் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பு இந்த முடிவிற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு நேட்டோ ஆயுதங்கள், நிதியுதவி வழங்குவதன் மூலம் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடச்சியாக பொருளாதார தடைகள் விதித்தால் அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்று பெலாரஸ் அதிபர் எச்சரித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அண்டை நாடாக உள்ள பெலாரஸ் , ஆரம்பம் முதல் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.