காசாவுக்கு 27 டன் மனிதாபிமான உதவிகளை அனுப்பும் ரஷ்யா!

By Manikanda Prabu  |  First Published Oct 19, 2023, 1:47 PM IST

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவுக்கு 27 டன் மனிதாபிமான உதவிகளை அனுப்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது


போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவுக்கு எகிப்து வழியாக 27 டன் மனிதாபிமான உதவிகளை ரஷ்யா அனுப்பியுள்ளாதாக அந்நாட்டின் அவசர சூழ்நிலைக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. “எகிப்தில் உள்ள எல்-அரிஷுக்கு மாஸ்கோவிற்கு அருகிலுள்ள ராமென்ஸ்காய் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் புறப்பட்டது. ரஷ்யாவின் இந்த மனிதாபிமான உதவிகளை காசா பகுதிக்கு அனுப்ப எகிப்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்” என்று ரஷ்ய துணை அமைச்சர் இலியா டெனிசோவ் தெரிவித்துள்ளார்.

இந்த உதவியில் கோதுமை, சர்க்கரை, அரிசி, பாஸ்தா ஆகியவையும் அடங்கும் என இலியா டெனிசோவ் தெரிவித்துள்ளார்.

Latest Videos

undefined

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் ஒரு மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ள காசாவிற்குள் மிகவும் அவசியமான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று வெளியிட்டார்.

இஸ்ரேல் உடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை, எகிப்துடனான தீவிர தொலைபேசி உரையாடல் ஆகியவற்றுக்கு பிறகு, எகிப்திலிருந்து காசாவிற்கு ரஃபா எல்லை வழியாக குறைந்த எண்ணிக்கையிலான டிரக்குகள் வெள்ளிக்கிழமை முதல் அனுமதிக்கப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

மீண்டும் மருத்துவமனை மீது தாக்குதல்; அலறி அடித்து ஓடும் மக்கள்; நரகம் போல் காட்சி அளிக்கும் காசா!

முன்னதாக, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்துக்கு ரஷ்யா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், மொசாம்பிக், காபோன் ஆகிய 5 நாடுகள் ஆதரவு அளித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. போதிய வாக்குகள் கிடைக்காததால் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருவதற்கிடையே, போர் விதிகளை மீறி காசா நகரில் அமைந்துள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என காசா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

click me!