90 வயதைத் தாண்டிய ரூபர்ட் மர்டாக் தனது ஐந்தாவது மனைவி ஆன் லெஸ்லியுடன் தனது வாழ்வின் மறுபாதியை ஆரம்பிக்கக் காத்திருப்பதாகச் சொல்கிறார்.
உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ஊடக நிறுவன தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக். இவர் தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது சொந்த செய்தித்தாளான நியூயார்க் போஸ்டில் பேட்டி அளித்துள்ளார்.
"நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். நான் காதலிக்க பயந்தேன் - இது எனது கடைசி காதலாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அப்படியே இருப்பது நல்லதுதான். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று மர்டாக் கூறியுள்ளார். 66 வயதான ஆன் லெஸ்லி ஸ்மித் அவரது புதிய வருங்கால மனைவியாக இருப்பவர். ஏற்கெனவே திருமணமாகி கணவரை இழந்தவர். மறைந்த இவரது கணவர் செஸ்டர் ஸ்மித், நாட்டுப்புற பாடகராகவும் மற்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியாகவும் இருந்தவர்.
மர்டாக், லெஸ்ஸி இருவரும் வருகிற கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர். "நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையின் இரண்டாம் பாதியை ஒன்றாகக் கழிக்க எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்" என மர்டாக் தெரிவித்துள்ளார்
மெல்போர்னில் பிறந்த மர்டாக், சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்குச் சொந்தக்காரர். இவர் தான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆன் லெஸ்லிக்காக அஸ்ஷர்-கட் வைர மோதிரத்தை வாங்க முடிவு செய்திருக்கிறாராம். இவர்களது காதல் பற்றி பேசுகையில், "காதலிக்க பயந்தேன்" என்று கூறிய மர்டாக், இதுவே தனது "கடைசி" உறவு என்றும் உறுதியாகச் சொல்லி இருக்கிறார்.
மர்டாக்கிற்கு முதல் மூன்று திருமணங்களில் ஆறு குழந்தைகள் பிள்ளைகள் பிறந்தனர். ப்ருடென்ஸ் மேக்லியோட், அவரது முதல் மனைவி பாட்ரிசியா புக்கருக்குப் பிறந்தவர். எலிசபெத்தும் மகன்கள் லாச்லன் மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரும் இரண்டாவது மனைவி அன்னா மானுக்குப் பிறந்தவர்கள். மூன்றாவது மனைவியான வெண்டி டெங்குக்கு கிரேஸ் மற்றும் சோலி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மர்டோக்கின் நான்காவது மனைவி முன்னாள் மாடல் அழகி ஜெர்ரி ஹால். கடந்த ஆண்டுதான் மர்டாக் இவரிடமிருந்து பிரிந்தார்.