
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க், உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கொலையாளியால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI (எஃப்.பி.ஐ) இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. இருப்பினும், கல்லூரி வயதுடைய கொலையாளியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
31 வயதான சார்லி கிர்க், இளம் வாக்காளர்களிடையே குடியரசுக் கட்சிக்கு ஆதரவைத் திரட்டுவதில் முக்கிய பங்காற்றியவர். அவர் புதன்கிழமை அன்று கொல்லப்பட்டார். உட்டா கவர்னர் ஸ்பென்சர் காக்ஸ், இது ஒரு அரசியல் படுகொலை என்று கூறினார்.
"ப்ரூவ் மீ ராங்" (Prove Me Wrong) என்ற பெயரில் சுமார் 3,000 பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்ற திறந்தவெளி நிகழ்ச்சியில் கிர்க் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகே உள்ள லூசி சென்டர் கட்டிடத்தின் கூரையில் இருந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டதாக உட்டா அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேக நபரின் தெளிவான வீடியோ காட்சிகள் காவல்துறையிடம் கிடைத்துள்ளதாகவும், அவர் கல்லூரி மாணவர் போல தோற்றமளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சக்திவாய்ந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது என்றும், தடயவியல் ஆய்வுகளுக்காக எஃப்.பி.ஐ ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்றும் எஃப்.பி.ஐ உறுதிப்படுத்தியது. மேலும், கால் தடயங்கள் மற்றும் பிற தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளியைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும், கலைஞர்களும் இந்த படுகொலைக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “சார்லி, இளைஞர்களின் மனதை நன்கு புரிந்துகொண்டவர். என் நிர்வாகம் இந்த அட்டூழியத்திற்கும், பிற அரசியல் வன்முறைகளுக்கும் காரணமான அனைவரையும், அதற்கு நிதியளிக்கும் மற்றும் ஆதரவளிக்கும் அமைப்புகளையும் கண்டுபிடிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
உட்டா கவர்னர் ஸ்பென்சர் காக்ஸ், "ஒருவரின் கருத்துக்கள் அல்லது லட்சியங்களுக்காக அவரது உயிரைப் பறிக்கும்போது, நம் நாட்டின் அரசியலமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது" என்று கூறினார். துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், நியூயார்க் பயணத்தை ரத்து செய்துவிட்டு, கிர்க் குடும்பத்தினரைச் சந்திக்க உட்டாவுக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிர்க், தனது இளம் வயது முதலே வலதுசாரி அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அவரது மரணம் அமெரிக்காவில் அரசியல் வன்முறை அதிகரித்து வருவது குறித்த கவலைகளை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியுள்ளது.