
அமெரிக்காவின் பிரபல வலதுசாரி பிரபலமும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய கூட்டாளியுமான சார்லி கிர்க், உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் புதன்கிழமை அன்று நடந்தது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில், 31 வயதான சார்லி கிர்க், திறந்தவெளியில் கூடியிருந்த பெரும் கூட்டத்தினரிடையே பேசிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. அதன் அடுத்த சில விநாடிகளில், கிர்க் தனது கழுத்தின் இடது பக்கத்தில் ரத்தம் பீறிட, கழுத்தைப் பிடித்தவாறே சரிந்து விழுந்தார். இதனைக் கண்ட பார்வையாளர்கள் பீதியில் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து சுமார் 90-180 மீட்டர் தொலைவில் உள்ள பல்கலைக்கழகத்தின் லூசி சென்டர் கட்டிடத்தின் கூரை மீது இருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது.
துப்பாக்கிச் சூட்டிற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட வீடியோக்களில், கருப்பு நிற உடை அணிந்த ஒரு நபர் லூசி சென்டரின் கூரையில் நடமாடுவது பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு சற்று முன்பு, ஒரு உருவம் கட்டிடத்தின் கூரை விளிம்பில் படுத்திருப்பது போன்ற காட்சிகளும், தாக்குதலுக்குப் பிறகு ஒருவர் கூரையில் ஓடுவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.
கிர்க் தனது உரையைத் தொடங்கிய சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு சுடப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடந்த அதே நேரத்தில், அவர் அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
உட்டா பொது பாதுகாப்புத் துறை, இந்த தாக்குதல் ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கூறியுள்ளது. இருப்பினும், சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று உட்டா மேயர் டேவிட் யங் தெரிவித்தார். இந்த கொலைக்கான நோக்கம் குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்த சம்பவம், அமெரிக்காவில் அரசியல் வன்முறை அதிகரித்து வருவது குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
சமீபகாலமாக, அமெரிக்காவில் அரசியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில், கடந்த ஜூன் மாதம் மினசோட்டா மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவர்களது வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்கக் கோரி கொலராடோவில் நடந்த அணிவகுப்பின் போது குண்டு வீசப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், பென்சில்வேனியா கவர்னர் வீட்டின் மீது தீ வைக்கப்பட்டது. இந்த வரிசையில், கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்டு டிரம்ப் சுடப்பட்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.