பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்காமல், மூன்றாவது டோஸ் செலுத்த முடிவு செய்யுமானால், அதற்கு நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.
தங்களிடமுள்ள கொரோனா தடுப்பூசிகளை ஏழை எளிய நாடுகளுக்கு தருவதற்கு மாறாக பூஸ்டர் டோஸ் தயாரிக்க பணக்கார நாடுகள் முயற்சித்து வருவது அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை கொத்துக் கொத்தாக பலிவாங்கி வருகிறது. முதல் அலை முடிந்து, இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி, தற்போது அதுவும் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. தற்போது மூன்றாவது அலையை எதிர்நோக்கி உலகம் காத்திருக்கிறது. இந்த வைரசிடமிருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பதால் பல நாடுகள் தடுப்பூசி உற்பத்தியில் தீவிரம் காட்டி வருவதுடன், தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தி குடிமக்களை பாதுகாத்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகள் தடுப்பூசி செலுத்துவதில் ஓரளவிற்கு தன்னிறைவு அடைந்துள்ளன. இந்தியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், போன்ற பல நாடுகள் வேகமாக வேகமாக தடுப்பூசிகளை உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகித்து வருகின்றன. அதே நேரத்தில் உகாண்டா, ஜிம்பாப்வே, போன்ற ஆப்ரிக்கா போன்ற பல ஏழை எளிய நாடுகள் தடுப்பூசிகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. இந்நிலையில் ஜெனிவாவில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நம்மில் பலரிடமும் அடிக்கடி கேட்கப்படும் ஒரே கேள்வி, இந்த நோய்த்தொற்று எப்போது முடிவடையும் என்பதுதான், அது மிக விரைவில் முடிவடையும் என்றுதான் நான் சொல்லுவேன். ஏனெனில் அதை எதிர்க்கும் ஆயுதம் தற்போது நம்மிடத்தில் உள்ளது.
ஆனால் அதை சரியாக விநியோகிக்க உலக அளவில் எந்த விதமான தீர்க்கமான ஒருங்கிணைப்பும் இல்லை, ஒரு சிறந்த தலைமை இல்லை, தடுப்பூசி என்பது தற்போது ஒரு தேசியவாதமாக மாறிவிட்டது, பல நாடுகள் தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றது. இதனால் நோய் தொற்று காலம் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்த வைரஸ் மீண்டும் பரவுகிறது. அதற்கு காரணம் இன்னும் பல நாடுகள் தடுப்புசி பற்றாக்குறை திண்டாடிவதே ஆகும். குறிப்பாக ஏழை நாடுகளில் தடுப்பூசிகள் இல்லை என்று தெரிந்து கொண்டே, பல பணக்கார நாடுகள் பூஸ்டர் டோசை கொண்டுவருவதற்கான பணிகளில் இறங்கியுள்ளனர். தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான எந்த அவசியமும் இல்லை. அதற்கான தேவை அறிவியல் பூர்வமாக நிறுபனமாகவும் இல்லை. முழுக்க முழுக்க மேசமாக சுயநலம் மேலோங்கி இருக்கிறது. தடுப்பூசியில் தன்னிறைவு அடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள தடுப்பூசிகளை ஏழை-எளிய நாடுகளுக்கு கொடுப்பதற்கு மாற்றாக பூஸ்டர் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
எதிர்காலத்தில் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது நிச்சயம் நாம் வெட்கப்படுவோம் எனக் கூறியுள்ளார். கடந்த 10 மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று, தற்போது டெல்டா என்ற புதிய வகை தொற்றால் மீண்டும் உயிரிழப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐநாவின் கோவாக்ஸ் திட்டத்திற்கு தடுப்பூசிகளை வழங்க முன்வரவேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும், இது குறித்து தெரிவித்துள்ள WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், தற்போது நான்கு நாடுகள் பூஸ்டர் டோஸ் திட்டங்களை அறிவித்துள்ளன. இன்னும் பல நாடுகளும் இதே போன்ற நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றன என்றார். அதேபோல் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பிரிவு தலைவர் மைக்கேல் ரியான் தெரிவிக்கையில், பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்காமல், மூன்றாவது டோஸ் செலுத்த முடிவு செய்யுமானால், அதற்கு நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க பணக்கார நாடுகள் மறுப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என கூறியுள்ளார்.