ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் நவம்பர் முதல் தேதிக்குள் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா 2வது அலை பல்வேறு நாடுகளிலும் மோசமான பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. போதாக்குறைக்கு கொரோனா 3வது அலை வைரஸின் டெல்டா மாறுபாடு தீவிரமாக இருக்கும் என்பதால், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனாவை எதிர்க்கும் பேராயுதம் தடுப்பூசி மட்டுமே என்பதை உணர்ந்து பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், சிலர் மெத்தனபோக்கையே கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுவதை உறுதி செய்யும் பொருத்து பிஜி அரசு கடுமையான நடவடிக்கையை அறிவித்துள்ளது.
அதாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று அந்நாட்டு பிரதமர் பிராங்க் பைனிமராமா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ‘No Jabs, No Job' அதாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால், வேலை இல்லை என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனாவைத் தவிர்ப்பதற்கு தடுப்பூசி போடுவது அவசியம் என்றும், அதை மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிஜி பிரதமர் பிராங்க் பைனிமராமா, ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் நவம்பர் முதல் தேதிக்குள் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் சார்பாக, தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டப்பட வேண்டு என்றும், இல்லையெனில் கடுமையான அபராதங்களுக்கு தயாராக இருக்குமாறும் நிறுவனங்களுக்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது. தனியார் ஊழியர்களுக்கான காலக்கெடு ஆகஸ்ட் 1ம் தேதி என நிர்ணயிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.