நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு 10 ஆயிரம் நடமாடும் வீடுகளை வழங்குவதாக கத்தார் நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் பலியாகிவிட்டனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடக்கலாம் என்று ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் இதனை 100 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் பேரிடராக அறிவித்துள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு 10 ஆயிரம் தயார்நிலை வீடுகளை வழங்குவதாக கத்தார் நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிகளின்போது மைதானம் அமைக்க பயன்படுத்தப்பட்ட கேபின்கள் தான் வீடுகளாக வடிவமைத்து துருக்கி மற்றும் சிரியாவுக்கு அனுப்பப்பட உள்ளன.
"துருக்கி மற்றும் சிரியாவின் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அந்த நாடுகளின் மக்களுக்கு மிகவும் தேவையான மற்றும் உடனடி ஆதரவை வழங்குகிறோம். எங்கள் கேபின்கள் மற்றும் கேரவன்களை அனுப்ப முடிவு செய்துள்ளோம்" என் கத்தார் அதிகாரி ஒருவர் கூறினார்.
Canada Hindu Temple: கனடாவில் ராமர் கோயில் மீது தாக்குதல்; இந்தியா கடும் கண்டனம்
கடந்த ஆண்டு கத்தார் கால்பந்து உலகக் கோப்பையை நடத்தியபோது கேபின்கள் தற்காலிக வீடுகளாக மாற்றி பயன்படுத்தப்பட்டன. போட்டி முடிந்ததும் அவற்றை நன்கொடையாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி துருக்கி மற்றும் சிரியாவுக்கு அந்த தயார்நிலை வீடுகள் அனுப்பப்பட உள்ளன.
வரும் திங்கட்கிழமை தோஹா துறைமுகத்தில் இருந்து துருக்கிக்கு இந்த வீடுகளைக் கொண்ட முதல் கப்பல் புறப்பட உள்ளது. மேலும் வரும் நாட்களில் மேலும் பல வீடுகள் அனுப்பிவைக்கப்படும் என கத்தார் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
துருக்கியில் நிலநடுக்க மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெரிய வெளிநாட்டு குழுக்களில் கத்தார் குழுவும் ஒன்று. கத்தார் நாட்டின் 130 பேர் அங்கு மீட்புப் பணியில் செயல்பட்டு வருகிறார்கள். இதுவரை கத்தார் தரப்பில் 100 டன் அளவுக்கு நிவாரணப் பொருட்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்துக்கு முன்பே கத்தார் அரசு துருக்கியுடன் நெருக்கமான உறவைப் பேணிவருகிறது. சரிவைச் சந்தித்துள்ள துருக்கிக்கு உதவ அந்நாட்டு ஷாப்பிங் மால்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் கத்தார் அரசு பெரிய முதலீடுகளைச் செய்துள்ளது.
நிலநடுக்க மீட்புப் பணிகளைச் சரியாகக் கையாளவில்லை என்று துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் குறித்து அந்நாட்டு மக்கள் விமர்சனம் செய்துவருகிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் பூகம்பத்தால் இடிந்து விழுந்துவிட்டதால் லட்சக்கணக்கான மக்கள் தங்குமிடம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இச்சூழலில் துருக்கியின் அவசரத் தேவைக்கு உதவும் வகையில் கத்தார் அரசு வீடுகளை வழங்க முன்வந்துள்ளது.
100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான இயற்கை பேரிடர்... துருக்கி நிலநடுக்கம் குறித்து WHO கருத்து!!