Qatar airways: நூற்றுக்கும் அதிக பயணிகளுடன் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் திடீரென பாகிஸ்தான் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த விமானத்தில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் உள்ளனர்.
"கராச்சியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்லி-தோஹா QR579 நிலை தான் என்ன? ஒரு தகவலும் இல்லை, பயணிகளுக்கு உணவோ அல்லது தண்ணீரோ எதுவும் வழங்கப்படவில்லை. கஸ்டமர் கேர் இருக்கிறதா என்றே தெரியவில்லை. தயவு கூர்ந்து உதவி செய்யுங்கள்," என விமானத்தில் இருக்கும் மருத்துவர் சமீர் குப்தா டுவிட் செய்து இருக்கிறார்.
"தோஹாவில் இருந்து பல்வேறு கனெக்டிங் விமானங்கள் இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். எனினும், கராச்சியில் இருந்து இந்த விமானம் எப்போது டேக் ஆஃப் ஆகும் என இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவே இல்லை," என மற்றொரு பயணியான ரமேஷ் ரலியா தெரிவித்தார்.
"டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 3.50 மணிக்கு கிளம்பிய கத்தார் ஏர்வேஸ் விமானம் 5.30 மணிக்கே கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு விட்டது. அவசர அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் இருந்த பயணிகள், உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் காத்து கொண்டு இருக்கின்றனர்," என ரலியா மேலும் தெரிவித்தார்.