ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு புற்று நோய் மட்டுமின்றி வேறு சில உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்று நோயை சரி செய்யும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிகிச்சை முடிந்து உடல் நிலை நலம்பெறும் வரை தனது அதிகாரத்தை ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் நிகோல் பட்ருஷெவ்-இடம் ஒப்படைக்க அதிபர் புதின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவர்களின் அறிவுரை படி ரஷ்ய அதிபர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இந்த அறுவை சிகிச்சைக்கு பின் சில காலம் விளாடிமிர் புதின் வழக்கமான செயல்களில் ஈடுபட முடியாது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதிபர் விளாடிமிர் புதினுக்கு புற்று நோய் மட்டுமின்றி வேறு சில உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.
டெலிகிராம் சேனல்:
முன்னாள் ரஷ்ய வெளியுறவு புலனாய்வு பிரிவு ஜெனரல் நடத்தி வரும் டெலிகிராம் சேனல் மூலம் இந்த விவரங்கள் வெளியாகி இருப்பதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
அதன்படி டெலிகிராம் சேனலில், "புதின் ஏற்கனவே பட்ருஷெவ்-ஐ சந்தித்து, தான் அவரை மிகவும் நம்புவதாகவும், அரசாங்கத்தில் நல்ல நண்பன் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இத்துடன் உடல்நிலை மோசமாகும் பட்சத்தில் அரசாங்கத்தின் முழு பொறுப்பும் பட்ருஷெவ் கைகளுக்கு சென்று விடும். பட்ருஷெவ் பக்கா வில்லன் ஆவார். விளாடிமிர் புதினுடன் ஒப்பிடும் போது இவர் அவரை விட மேலானவர். மேலும் இவர் ஆட்சி அமைக்க வந்தால், ரஷ்யாவின் சிக்கல்கள் அனைத்தும் பலமடங்கு அதிகரிக்கும்" என குறிப்பிட்டுள்ளது.
பட்ருஷெவுக்கு ரஷ்யாவை ஆளும் அதிகாரம் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இருக்கும் பட்ருஷெவ் நேரடியாக புதினுக்கு பதில் அளிக்கும் அதிகாரம் படைத்தவர் ஆவார். இவர் விளாடிமிர் புதினின் நம்பிக்கையை வென்றவர் ஆவார்.