சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விலை கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 0.4% குறைந்து இருக்கிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரின் நகர்ப்புற மறுகட்டமைப்பு ஆணையம் இதுகுறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தளவிற்கு சரிந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் இந்த சரிவு இருப்பதாக தெரிய வந்துள்ளது. முந்தைய இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.4% சரிவைக் கண்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் இருந்து விலை உயர்வு சரிந்து வந்திருக்கிறது. முத்திரைத்தாள் கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருப்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் முத்திரைத்தாள் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் தேசிய வளர்ச்சித்துறை அமைச்சர் தேஸ்மாண்ட் லீ, ''தொடர்ந்து ரியல் எஸ்டேட் போக்கு குறித்து கவனித்து வருகிறோம். அதற்கு தகுந்தாற்போல் எங்களது கொள்கைகளை மாற்றி அமைப்போம். தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அரசு தொடர்ந்து வீட்டு எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு 9,250 வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. தேவைக்கு ஏற்ப வீடுகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளிலும் அரசு ஈடுபட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
வீட்டுக் கடன் மீதான வட்டியும் அதிகமாக இருப்பதால், வீடுகளை வாங்குவதற்கு தயங்குகின்றனர் என்ற கருத்தும் பறிமாறப்பட்டு வருகிறது. மேலும், சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்குவதும் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கடந்த ஏப்ரல் மாதத்தில் 112, மே மாதத்தில் 69 வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரில் வீடு வாங்கி இருந்தனர். அது கடந்த ஜூன் மாதத்தில் வெறும் 21ஆக குறைந்து இருக்கிறது. ஜூன் மாதத்தில் வீடு வாங்கியவர்கள் சிங்கப்பூரில் நிரந்தரமாக தங்கி வரும் சீனர்கள் என்பது தெரிய வந்துள்ளது. முத்திரைத்தாள் விலை உயர்வு, வட்டி உயர்வு போன்ற காரணங்களால் சிறிது சுணக்கம் இருந்தாலும், இன்னும் சில மாதங்களில் வீடு விற்பனை சூடு பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் ஆண் நண்பருக்கு பாலியல் வன்கொடுமை: 12 கசையடி, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!