கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை... ரூ.500க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை!!

By Narendran S  |  First Published Mar 25, 2022, 9:10 PM IST

கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையில் அரிசி, சக்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. 


கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையில் அரிசி, சக்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமான நாடுகளில் பொருளாதர நெருக்கடி ஏற்பட்டது. அந்த வகையில் இலங்கை மீண்டெழ முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு மக்கள் மீதான சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பால், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பசியால் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்க டாலர் கையிருப்பு இல்லாத இலங்கையில், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கு மத்தியில் நாளொன்றுக்கு 7 மணி நேரங்கள் மின்வெட்டும் நிலவுகிறது.

Tap to resize

Latest Videos

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட உணவு தட்டுப்பாடு காரணமாக அரிசி, சர்க்கரைஉள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின்  விலைகள் விண்ணை முட்டுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 14 பில்லியன் டாலர் இழப்பை இலங்கை அரசாங்கம் சந்தித்துள்ளது. இதனால்,கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு உணவு, மருந்து, பால் பவுடர், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன்படி, இலங்கையில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 இலங்கை ரூபாயை எட்டியுள்ளது. இலங்கையில் 400 கிராம் பால் பவுடர் ரூ.790 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் பால் பவுடர் விலை 250 ரூபாய் உயர்ந்துள்ளது.

இலங்கையில் ஒரு கிலோ சர்க்கரை விலை 290 ரூபாயை எட்டியுள்ளது. இதற்கிடையில்,பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதே சமயம், மின் உற்பத்தி நிலையங்களை இயக்க எரிபொருள் பற்றாக்குறை மற்றும் வறண்ட காலநிலை நீர்மின் திறனைக் குறைத்துள்ளதால், அங்கு வசிப்பவர்கள் தினசரி அதிக நேர மின்வெட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பற்றாக்குறை காரணமாக, எரிபொருட்கள்,உணவுப் பொருட்களை வாங்க மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனிடையே, இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் காரணமாக, அங்கிருந்து இலங்கை தமிழர்கள், அகதிகளாக தமிழகத்திற்கு வருகின்றனர். அந்த வகையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் இரண்டு குழுக்களாக தமிழ்நாட்டை அடைந்தனர்.

click me!