
Pope Francis' funeral: கத்தோலிக்க திருச்சபை மதத் தலைவரும், வாடிகன் தலைவருமான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21ம் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வாடிகனுக்கு திரண்டு வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி
நேற்று மட்டும் பல ஆயிரக்கணக்கான மக்கள் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மக்கள் அலை அலையாக திரண்டு வந்ததால் வாடிகன் முழுவதும் நிரம்பி வழிகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்பட பலர் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். சுமார் 2.5 லட்சம் பேர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது.
போப் பிரான்சிஸ் விருப்பத்துக்கு இணங்க..
போப் பிரான்சிஸ் உடலுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்திய நிலையில், அவாது உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது. போப் பிரான்சிஸ், எளிமையான இறுதிச் சடங்குகளைக் கோரியிருந்தார். அவரது விருப்பத்திற்கு இணங்க, முந்தைய போப்பாண்டவர் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட சைப்ரஸ், ஈயம் மற்றும் ஓக் மரங்களால் ஆன பாரம்பரிய மூன்று அடுக்கு சவப்பெட்டிகளைத் தவிர்த்து, ஒரு மர சவப்பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டது. திருத்தந்தை பதவிக் காலத்தில் அச்சிடப்பட்ட நாணயங்கள் மற்றும் அவரது போப்பாண்டவரின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாகக் கூறும் ஒரு பத்திரம் ஆகியவை சீல் வைக்கப்படுவதற்கு முன்பு சவப்பெட்டியின் உள்ளே வைக்கப்பட்டன.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அமைச்சர் நாசர் அஞ்சலி
இந்நிலையில், போப் பிரான்சிஸ் உடலுக்கான இறுதிச் சடங்கு இந்திய நேரப்படி இன்று மதியம் தொடங்கியது. போப் பிரான்சிஸ் விருப்பப்படி மிக எளியமையான முறையில் இறுதிச்சடங்கு நடந்தது. இதற்கு முன்னதாக இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ ஆகியோர் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இது தவிர தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
எளிய முறையில் இறுதிச்சடங்கு
இதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ்: ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் புனித பீட்டர் தேவாலாயத்துக்கு வெளியே பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து போப் பிரான்சிஸ்க்கு பிரியா விடை கொடுத்தனர். போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கின்போது அவரது உடலை தாங்கி இறுதி ஊர்வலம் நடந்தது. புனித பீட்டர் சதுக்கத்தில் இருந்து புனித மேரி பேராலயத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
900 ஆண்டுகளாக காக்கப்பட்ட ரகசியம்: அடுத்த போப் யார்? உலகம் அழிகிறதா? வெளியான திடுக் தகவல்கள்!!
போப் பிரான்சிஸ் உடல் இறுதி ஊர்வலம்
பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு நடந்த நிலையில், கர்தினால்கள் வரிசையாக நின்று போப் உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர். இறுதிச்சடங்கின்போது அவரது உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பலி, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சுமார் 2 மணி நேர இறுதிச்சடங்குக்கு பிறகு போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வாடிகன் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இருந்து சாண்டோ மேரி மாரியோ சர்ச்க்கு போப் பிரான்சிஸ் உடல் எடுத்து செல்லப்படுகிறது. அதன்பிறகு அங்கு உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்ற உலகத் தலைவர்களின் பட்டியல்:
ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக அங்கு அடக்கம் செய்யப்பட்ட முதல் போப் பிரான்சிஸ் ஆவார். போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் 50 வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் 10 மன்னர்கள் உட்பட 130 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆசியா
இந்தியா: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
பிலிப்பைன்ஸ்: ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் மற்றும் முதல் பெண்மணி லிசா மார்கோஸ்
அமெரிக்கா
அமெரிக்கா: ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப்
அர்ஜென்டினா: ஜனாதிபதி ஜேவியர் மிலே
பிரேசில்: ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் அவரது மனைவி ஜன்ஜா
ஐக்கிய நாடுகள் சபை: ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
ஐரோப்பா
பிரான்ஸ்: ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்
ஜெர்மனி: ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் மற்றும் வெளியேறும் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்
ஹங்கேரி: ஜனாதிபதி தமாஸ் சுல்யோக் மற்றும் பிரதமர் விக்டர் ஓர்பன்
உக்ரைன்: ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா
இங்கிலாந்து: அரச தலைவர் மூன்றாம் சார்லஸ் மற்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை பிரதிநிதித்துவப்படுத்தும் இளவரசர் வில்லியம்
Pope Francis: போர் இல்லா உலகத்தை விரும்பிய சமாதான புறா! யார் இந்த போப் பிரான்சிஸ்? அடுத்த போப் யார்?