
காஷ்மீர் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றநிலை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் "மோசமானது" என்றார். அதைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரில் ஆயிரம் ஆண்டுகளாக போராடி வருகின்றன என்றும் கூறினார்.
"நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், பாகிஸ்தானுக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், உங்களுக்குத் தெரியும், அவர்கள் காஷ்மீரில் ஆயிரம் ஆண்டுகளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அநேகமாக அதைவிடவும் நீண்டதாக இருக்கலாம்" என்று டிரம்ப் குறிப்பிட்டார். இத்துடன் நிற்காமல், காஷ்மீர் எல்லையில் 1,500 ஆண்டுகளாக பதட்டங்கள் உள்ளன என்றும் கூறினார்.
டிரம்பின் காஷ்மீர் குறித்த இந்தப் பேச்சு பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நெட்டிசன்கள் சிலர் 1947 க்கு முன்பு பாகிஸ்தான் என்ற நாடு உருவாகவே இல்லை என்று சுட்டிக்காட்டினர். பாகிஸ்தான் தோன்றி 78 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
"காஷ்மீருக்காக பாகிஸ்தானும் இந்தியாவும் ஆயிரம் ஆண்டுகளாகப் போராடி வருகிறது என்ற முத்தான கருத்தை டிரம்பால் மட்டுமே உதிர்க்க முடியும். இன்றைய பாகிஸ்தானும் இந்தியாவும் தோன்றி இன்னும் நூறு ஆண்டுகள்கூட ஆகவில்லை. ஆகஸ்ட் 1947க்கு முன்பு, இரண்டும் ஒரே நாடுதான். காஷ்மீர் அதன் ஒரு பகுதியாக இருந்தது" என்று எக்ஸ் பயனர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
நெட்டிசன்கள் பலர் டிரம்ப்பின் இந்த வினோதமான கருத்து குறித்து கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் டிரம்ப் காஷ்மீர் பற்றி கருத்து தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.