ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உஸ்பெஸ்கிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி!!

By Dhanalakshmi GFirst Published Sep 12, 2022, 10:11 AM IST
Highlights

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரும் 15ஆம் தேதி உஸ்பெஸ்கிஸ்தான் செல்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் உலகாளவிய விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்வார்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும், நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க இருக்கின்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இருக்கும் உறுப்பு நாடுகளான இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கும் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பிராந்திய பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பின் (ஆர்ஏடிஎஸ்) நிர்வாக இயக்குநர்கள், துர்க்மெனிஸ்தான் அதிபர் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி மற்ற நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2019 க்குப் பிறகு நடைபெறும் முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தலைவர்களை தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி சந்தித்து பேசுவாரா என்பது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை.  

நடுவானில் விமானத்தில் கோளாறு.. அந்த திகில் நிமிடங்கள் - தப்பித்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி வரும் 15-16 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சமர்கண்ட் செல்கிறார்.

உச்சிமாநாட்டின் போது, ​​தலைவர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக அமைப்பின் செயல்பாடுகளை ஆய்வு செய்வார்கள் மற்றும் எதிர்காலத்தில் பலதரப்பு ஒத்துழைப்பின் நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிப்பார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் 2019 ஆம் ஆண்டில் இறுதியாக ஷாங்காய் உச்சி மாநாடு நடந்து இருந்தது. 
2020 ஆம் ஆண்டில், மாஸ்கோவில் உச்சிமாநாடு நடந்தது. ஆனால், இந்த மாநாட்டில் தலைவர்கள் யாரும் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காரணத்தினால், வெர்சுவல் முறையில் மாநாடு நடந்து முடிந்தது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்பினர்களைக் கொண்ட பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கூட்டமைப்பாகும். 2019 ஆம் ஆண்டு பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) சந்திப்புக்குப் பின்னர், பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் கலந்து கொள்ளும் முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.  

வரலாற்று தருணம்... பால்மோரவில் இருந்து புறப்பட்டது ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்!!

கிழக்கு லடாக்கில், 2020, மே மாதம் இந்திய எல்லைக்குள் சீன துருப்புக்கள் ஊடுருவியதால், இரு தரப்புக்கும் இடையே உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. இந்த சிக்கல் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. தொடர்ந்து ராணுவ மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளிலும், கோக்ரா பகுதியிலும் கடந்த ஆண்டு இரு தரப்பினரும் தங்களது படைகளை வாபஸ் பெற்று இருந்தனர். 

தற்போது, கிழக்கு லடாக்கில் உள்ள கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் இந்தியாவும், சீனாவும் தங்களது படைகளை வாபஸ் பெறுவது என்ற ஒப்பந்தத்திற்கு வந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ள கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் ரோந்துப் புள்ளி 15ல் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளதாக இந்திய மற்றும் சீனப் படைகள் அறிவித்துள்ளன. இதை இந்தியாவும் உறுதிபடுத்தியுள்ளது. 

உஸ்பெஸ்கிஸ்தானில் நடக்கவிருக்கும் ஷாங்காய் உச்சி மாநாட்டை அடுத்து இந்த அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும் என்று கூறப்படுகிறது. 

click me!