அமெரிக்காவிற்கு மூன்று நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் மோடி இன்று அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு வெள்ளை மாளிகையில் பதில் அளிக்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நியூயார்க்கில் இருக்கும் ஐநா தலைமையகத்தில் 180 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தலைமையேற்று யோகா நிகழ்வில் பங்கேற்றார். இதையடுத்து, வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் கொடுத்த சிறப்பு விருந்தில் கலந்து கொண்டார். இதையடுத்து இன்று இரவு பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்களை சந்திக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
பொதுவாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை. பேட்டி கொடுப்பதில்லை. முதன் முறையாக அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் செய்தியாளர்களை மோடி சந்தித்து இருந்தார். ஆனால், அவர்களது கேள்விகளை ஏற்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.
ஜோ பைடன் மனைவிக்கு 7.5 காரட் வைரம்: பிரதமர் மோடி கொடுத்த கிஃப்ட்!
இன்று அளிக்க இருக்கும் பேட்டி குறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு அதிகாரி ஜான் கிர்பை கூறுகையில், ''செய்தியாளர்கள் சந்திப்பு பெரிய டீல். பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்பதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அவரும் இந்த செய்தியாளர் சந்திப்பை எங்களைப் போன்றே முக்கியம் என்று உணர்ந்து இருக்கிறார். ஒரு கேள்வி அமெரிக்க செய்தியாளர்களிடம் இருந்தும், ஒரு கேள்வி இந்திய செய்தியாளர்களிடம் இருந்தும் கேட்கப்படும். மிகக் குறைந்த கேள்விகளே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன'' என்றார்.
வாஷிங்டனில் கொட்டும் மழையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு! - மழையிலும் ஓங்கி ஒலித்த நம் தேசிய கீதம்!
பிரதமர் மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் கீழ் இந்தியாவில் ஜனநாயகம் பின்னடைவை சந்தித்து இருப்பதாக அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால், மோடியிடம் மனித உரிமைகள் பிரச்சினையை எழுப்ப வேண்டிய அழுத்தத்திற்கு ஜோ பைடன் தள்ளப்பட்டார் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. இந்த நிலையில், செய்தியாளர்களின் சந்திப்பில் மனித உரிமைகள் தொடர்பாக ஒரு கேள்வியும் கேட்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பிரதமராக பதவியேற்ற 2014 ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவுக்கு மோடி ஐந்து முறை சென்றுள்ளார். ஆனால், இதுதான் அவர் முழு அரசு மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விதவிதமான உணவுகள்: ரசித்து சாப்பிட்ட பிரதமர் மோடி!