விதவிதமான உணவுகள்: ரசித்து சாப்பிட்ட பிரதமர் மோடி!

By Manikanda Prabu  |  First Published Jun 22, 2023, 10:15 AM IST

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொடுத்த விருந்தில் இடம்பெற்றிருந்த உணவு பொருட்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது


அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, தனது நியூயார்க் பயணத்தை முடித்துக் கொண்டு வாஷிங்டன் சென்றுள்ளார். இதையடுத்து, வெள்ளை மாளிகைக்கு சிறப்பு அழைப்பாளராக சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் அதிபர் ஜோ பைடன் வரவேற்றனர்.

அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ஆகிய இருவரும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்திய இசை மற்றும் நடனத்தை ரசித்தனர். இதையடுத்து, பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கும் வகையில், அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில், அரசு சார்பில் அவருக்கு இரவு விருந்து அளித்தனர்.

Tap to resize

Latest Videos

இரவு உணவிற்கு முன்னதாக, அதுகுறித்த ஏற்பாடுகள் பற்றிய விவரங்களை ஜில் பைடன் விளக்கினார். அதன்படி, இரவு உணவுக்கான தீம் தேசிய பறவையான மயில் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தியத் தொடர்பை குறிக்கும் வகையில், மூவர்ணக் கொடியைக் குறிக்கும் அலங்காரம் உள்ளிட்டவைகளும் இடம் பெற்றிருந்தன. 

ஜி20 வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில் அண்மையில் பேசிய பிரதமர் மோடி, சிறுதானியங்கள், தினை உள்ளிட்டவைகளின் அவசியம் குறித்தும், அதனை உபயோகப்படுத்துவதை வலியுறுத்தியும் பேசினார். அதன்படி, உணவு மெனுவில் தினை சார்ந்த உணவுகளும் இடம் பெற்றிருந்தன.

பிரதமர் மோடி சைவ உணவு சாப்பிடும் பழக்கம் உடையவர். எனவே, பிரதமர் மோடிக்கான உணவு வகைகளை தயாரிக்கும் பொருட்டு, வெள்ளை மாளிகை ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றவும், சைவ மெனுவை தயாரிப்பதற்கும், தாவர அடிப்படையிலான உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்ற சமையல் கலைஞர் நினா கர்ட்டிஸ் என்பவரை கேட்டுக் கொண்டதாக ஜில் பைடன் தெரிவித்தார். இருப்பினும், விருந்தினர்களுக்கான மெனுவில் மீனும் இருந்தது.

ஜோ பைடன் மனைவிக்கு 7.5 காரட் வைரம்: பிரதமர் மோடி கொடுத்த கிஃப்ட்!

பிரதமர் மோடிக்கான இரவு விருந்தில் இருந்த மரைனேட்டட் தினை, வறுக்கப்பட்ட சோள கர்னல் சாலட், தர்பூசணி, புளிப்பான வெண்ணெய் பழ சாஸ்  உள்ளிட்டவைகள் இருந்தன. மேலும், ஸ்டஃப் செய்யப்பட்ட போர்டோபெல்லோ காளான்கள், கிரீமி குங்குமப்பூ கலந்த ரிசொட்டோ, சுமாக் வறுத்த கடல் பாஸ், எலுமிச்சை-வெந்தயம் தயிர் சாஸ், மிருதுவான தினை கேக்குகள், கோடை ஸ்குவாஷ்கள் ஆகியவையும் இருந்தன. இந்த உணவு வகைகளை பிரதமர் மோடி மிகவும் ரசித்து சாப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரவு விருந்துக்கு பின்னர் பிரதமர் மோடியும், அதிபர் ஜோ பைடனும் தனிமையில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். முன்னதாக, பழமைான பாரம்பரியான புத்தகம் மற்றும் கேமராவை பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் பரிசாக அளித்தார். அதேபோல், ஜோ பைடனுக்கு பத்து முதன்மை உபநிடதங்கள்’ புத்தகத்தின் முதல் பதிப்பின் பிரதி, சிறப்பு சந்தனப் பெட்டி, அவரது மனைவிக்கு 7.5 காரட் வைரம் ஆகியவற்றை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

click me!