மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் அவர்களது பெற்றோர்களை கைது செய்யும் புதிய உத்தரவை சவுதி அரேபிய அரசு பிறப்பித்துள்ளது
சட்டங்கள் கடுமையாக இருக்கும் சவுதி அரேபியாவில், எந்த காரணமும் இல்லாமல் 20 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோர்கள் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அந்நாட்டு கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனமான மெக்கா செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு மாணவர் 20 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், அவர்களது பாதுகாவலர் அல்லது பெற்றோர் குறித்து அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டியது அப்பள்ளியின் பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய அரசின் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இதுகுறித்து விசாரிக்க அதிகாரம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரிக்கும் அரசு வழக்கறிஞர் அலுவலகம், விசாரணையை இறுதி செய்து பின்னர் வழக்கை குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பும். பாதுகாவலர் அல்லது பெற்றோர் அலட்சியத்தால் மாணவர் பள்ளிக்கு செல்லாதது நிரூபிக்கப்பட்டால், அவர்களது பாதுகாவலர் அல்லது பெற்றோருக்கு குறிப்பிட்ட காலம் சிறைத்தண்டனை விதிக்க நீதிபதிக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'X Hiring'... அடுத்த அதிரடி: வேலைவாய்ப்பு பிரிவை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்!
இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், பள்ளியின் முதல்வர் கல்வி அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முதற்கட்ட விசாரணையை கல்வி அமைச்சகம் நடத்தும். பின்னர், இந்த வழக்கு குடும்ப பராமரிப்புத் துறைக்கு மாற்றப்படும். பள்ளிக்கு வராத காரணம் குறித்து மாணவரிடம் அந்த துறை விசாரிக்கும். இதைத் தொடர்ந்து, தேவைப்பட்டால், வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, பாதுகாவலர் அல்லது பெற்றோரை அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைக்கு உட்படுத்தலாம். பெற்றோரை விசாரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் பரிந்துரைக்கலாம். அதன்பிறகு குற்றவியல் நீதிமன்றம் வழக்கை விசாரிக்கும். ஒருவேளை குழந்தையை கவனித்துக்கொள்வதில் கவனக்குறைவாக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்கும்.
ஒரு மாணவர் 3 நாட்கள் விடுமுறை எடுத்தால், முதல் எச்சரிக்கை விடுக்கப்படும். 5 நாட்கள் விடுமுறை எடுத்தால் இரண்டாவது எச்சரிக்கை விடுக்கப்பட்டு பெற்றோருக்கு இதுகுறித்து அறிவிக்கப்படும். 10 நாட்களுக்குப் பிறகு, மூன்றாவது எச்சரிக்கை விடுக்கப்பட்டு பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். 15 நாட்களுக்கு பிரகு, அந்த மாணவர் கல்வித்துறை மூலம் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார். 20 நாட்களுக்குள்ளாக குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் விதிகளின்படி, விசாரணை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வியாண்டில் மாணவர்களிடம் சிறந்த படிப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, சவுதி அரேபியாவில், 60 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இரண்டு மாத கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பியுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், பூமி அறிவியல், விண்வெளி மற்றும் நிகழ்வு மேலாண்மை போன்ற புதிய பாடங்களை இடைநிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க சவுதி அரேபியா கல்வி அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.