பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் நாடாளுமன்றம் மீண்டும் செயல்படுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் ஏப்.9 ஆம் தேதி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து நாளை மறுநாள் காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக கடந்த மார்ச் 28 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் கடந்த 31 ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் கடந்த 3 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடப்பதாக இருந்தது.
இதனிடையே, இத்தீர்மானத்தை நிராகரித்து துணை சபாநாயகர் காசிம்கான் சுரி உத்தரவிட்டார். இதையடுத்து, பிரதமர் இம்ரான்கானின் பரிந்துரையின் பேரில், நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் ஆரிஃப் அல்வி உத்தரவிட்டார். இது தொடர்பாக, அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை 3 ஆவது நாளாக நேற்று நடைபெற்றது. அப்போது, தலைமை நீதிபதி உமர் அடா பண்டியால் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவரங்கள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
ஆட்சியை கலைக்க வெளிநாட்டு சதி இருப்பதாக கூறுவதற்கான ஆதாரம் பற்றியும் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொண்டது. இந்த நிலையில் இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ரத்து குறித்த வழக்கில் இன்றும் விசாரணை நடைபெற்றது. அதன் முடிவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுக்குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பில், பாகிஸ்தான் துணை சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க எடுத்த முடிவு சட்டவிரோதமானது. நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது. நாடாளுமன்றம் மீண்டும் செயல்படலாம். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். பொதுத்தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற உத்தரவும் செல்லாது என்று தெரிவித்துள்ளது.