இம்ரான்கான் பரிந்துரைத்த முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவை இடைக்கால பிரதமராக ஏற்க எதிர்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இம்ரான்கான் பரிந்துரைத்த முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவை இடைக்கால பிரதமராக ஏற்க எதிர்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதை அடுத்து 90 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக கடந்த மார்ச் 28 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் கடந்த 31 ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் கடந்த 3 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடப்பதாக இருந்தது. இதனிடையே, இத்தீர்மானத்தை நிராகரித்து துணை சபாநாயகர் காசிம்கான் சுரி உத்தரவிட்டார்.
இதையடுத்து, பிரதமர் இம்ரான்கானின் பரிந்துரையின் பேரில், நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் ஆரிஃப் அல்வி உத்தரவிட்டார். இது தொடர்பாக, அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை 3 ஆவது நாளாக நேற்று நடைபெற்றது. அப்போது, தலைமை நீதிபதி உமர் அடா பண்டியால் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவரங்கள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். ஆட்சியை கலைக்க வெளிநாட்டு சதி இருப்பதாக கூறுவதற்கான ஆதாரம் பற்றியும் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொண்டது.
இதனிடையே பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதியான குல்சார் அகமதுவை நியமிக்குமாறு, அதிபர் ஆரிஃப் அல்வியிடம் இம்ரான்கான் பரிந்துரை செய்தார். ஆனால் இம்ரான்கானின் இந்த பரிந்துரையை எதிர்கட்சிகள், கூட்டாக நிராகரித்து விட்டன. இதையடுத்து பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் பாகிஸ்தானில் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள ஆரிஃப் அல்வி, இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்றும், தேர்தல் தேதியை முடிவு செய்து, தமக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.