
பாகிஸ்தான் பயங்கரவாதி யாகூப் முகலின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
புதன்கிழமை நள்ளிரவில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் அதிகாரிகள் பகிரங்கமாகப் பங்கேற்றிருப்பது அந்நாட்டு ராணுவத்துக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் இடையே உள்ள தொடர்பைக் காட்டும் வகையில் உள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ பதிவில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதியின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் பலர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) முசாபராபாத்தில் உள்ள பிலால் பயங்கரவாத பயிற்சி முகாமின் தலைவரான யாகூப் முகல், புதன்கிழமை அதிகாலையில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்ட 23 நிமிடங்களுக்குள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது இடங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்துவிட்டது. இது 1971 போருக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலாகும்.
முகல் தலைவகித்த பிலால் முகாம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான களமாக அறியப்பட்டதாகும். முகலின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் காவல்துறை மற்றும் ஐஎஸ்ஐ அதிகாரிகள் இருப்பது, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்ற நீண்டகால குற்றச்சாட்டை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.
இறுதிச் சடங்கில், உளவுத்துறை ஏஜெண்டுகள் போல சீருடை அணிந்த பலரும் இருப்பதை வீடியோ தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், முகலின் மரணத்தை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் பாகிஸ்தான் இன்னும் வெளியிடவில்லை.