அரேபியாவிடம் அவமானப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தளபதி..!! சரிகட்ட சீனா விரைந்தார் ஷா முகமது குரேஷி..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 21, 2020, 2:14 PM IST
Highlights

பாகிஸ்தானின் எதிர்காலமும், முன்னேற்றமும், சீனாவுடன் இணைந்துள்ளது. அதேநேரத்தில் சவுதி அரேபியாவுடனான பாகிஸ்தானின் உறவுகளில் எந்த மாற்றமும் இல்லை. எந்த வேறுபாடுகளும் இல்லை எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி சீனாவுக்கு இரண்டு நாள் அவசர சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீன வெளியுறவு துறை அமைச்சருடன் ஹைனான் மாகாணத்தில் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதமும் இதேபோன்ற சந்திப்பு நடைபெற்றது.

சீனாவுக்கு செல்வதற்கு முன், வீடியோ வெளியிட்ட குரேஷி, சீனாவுக்கு ஒரு முக்கியமான காரணத்திற்காக தான் பயணம் மேற்கொள்வதாக கூறினார். பயணத்திற்கு முன்னர், பிரதமர் இம்ரான் கானுடன் உரையாடியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி யுடனான  இச்சந்திப்பு இருநாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இருக்கும் என தான் நம்புவதாக அவர் கூறினார். சமீபத்தில் பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையேயான உறவு  மோசமடைந்துள்ள நிலையில், அவரது சீன பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

அதாவது காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலையிடவேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதை சவுதி அரேபியா தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதனால் சவுதி அரேபியாவை எச்சரிக்கும் வகையில் ஷா முகமது குரேஷி பேட்டி ஒன்று கொடுத்தார். அதில், காஷ்மீர் விவகாரத்தில் தலையிட சவுதி அரேபியாவுக்கு முடியாவிட்டால், அதை வெளிப்படையாக சொல்லிவிடலாம், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் தயாராக இருக்கிறது எனவும், இது குறித்து பிதரமர் இம்ரான் கானுடன் அலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் ஆவேசமாக பேசி, சவுதி அரேபியாவை எச்சரித்தார். மேலும், காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அவதிப்படுவதை சவுதி அரேபியா வேண்டுமானால் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் பாகிஸ்தான் அதை வேடிக்கை பார்க்காது என கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சால் ஆத்திரமடைந்த சவுதி, இதுவரை பாகிஸ்தானுக்கு வழங்கிய கடனை திருப்பி தருமாறு வலியுறுத்தியது. 

அதாவது சவுதி அரேபியாவிடமிருந்து இதுவரை 6.2 பில்லியன் டாலர் நிதியை பாகிஸ்தான் கடனாகப் பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த கடனில் ஒரு பில்லியன் டாலரைமட்டும்  பாகிஸ்தான் சவுதிக்கு திருப்பி கொடுத்துள்ளது. சீனாவிடமிருந்து பணத்தை பெற்று சவுதி அரேபியாவுக்கு கடனை பாகிஸ்தான் திருப்பி செலுத்தியுள்ளது. அதே நேரத்தில்  பாகிஸ்தான் மீது கோபத்தில் உள்ள சவுதி அரேபியாவை சமாதானப்படுத்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா ரியாத் விரைந்தார்.ஆனால் அவரை சவுதி இளவரசர் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டார். இதனால் ஒரு சில நாட்களிலேயே அவர் அவமானத்துடன் நாடு திரும்பினார். இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி சீனாவுக்கு இரண்டு நாள் அவசரப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதேவேளையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், பாகிஸ்தானின் எதிர்காலமும், முன்னேற்றமும், சீனாவுடன் இணைந்துள்ளது. அதேநேரத்தில் சவுதி அரேபியாவுடனான பாகிஸ்தானின் உறவுகளில் எந்த மாற்றமும் இல்லை. எந்த வேறுபாடுகளும் இல்லை எனக் கூறியுள்ளார். 

இத்தகைய நேரத்தில் ஷா முகமது குரோஷியின் சீன பயணம் அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. மொத்தத்தில் சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுடன் சீனா எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை இது காட்டுகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் சஞ்சய் கே பரத்வாஜ்,  பாகிஸ்தான் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான இப்பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையேயான வணிகம் மற்றும் உறவுகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும். இருப்பினும் இது சவுதி அரேபியா உடனான உறவை பாதிக்கும் என அவர் கூறியுள்ளார்.

click me!