அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனாவின் தாக்கம், உலகம் முழுவதும் 2021ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே கட்டுக்குள் வர ஆரம்பித்தன. இதனால் உலக நாடுகள் பலவும் தங்களுடைய கட்டுப்பாடுகளை தகர்த்து, இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தன. இந்நிலையில் கொரோனா வைரஸின் கோரதாண்டவம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைய நிலவரப்படி 12 கோடியே 28 லட்சத்து 68 ஆயிரத்து 369 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 கோடியே 71 லட்சத்து 2 ஆயிரத்து 562 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும், 99 லட்சத்து 26 ஆயிரத்து 811 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகளும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்ட அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருடைய உதவியாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு இம்ரான் கான் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.