பிரதமர் இம்ரான்கான் முன்வந்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் , அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அந்நாட்டு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் , அவர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக அவரின் உதவியாளர் தகவல் தெரிவித்துள்ளார் , பிரதமர் இம்ரான்கானை சந்தித்த தொழிலதிபர் ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர் பரிசோதனை செய்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . உலகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இதுவரையில் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் .
இந்தியா போலவே பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் 9 ஆயிரத்தை கடந்துள்ளது . இதுவரை 200க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர் . கொரோனாவை கட்டுப்படுத்த பாகிஸ்தானிலும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது கொரோனா வைரஸ் எதிரொலியாக பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது , இந்த வைரசை எதிர்த்து போடுவதற்கு போதிய நிதி இல்லையென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கவலை தெரிவித்துள்ளார் . கொரோனாவை எதிர் கொள்ளவும் அதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுசெய்யவும் நாட்டு மக்கள் மனமுவந்து நிதி வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் தொழிலதிபர்கள் , பிரதமரை சந்தித்து நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் பிரபல அறக்கட்டளை நிறுவனர் தலைவர் அப்துல் சத்தார் எதியின் மகனும் அறக்கட்டளை தலைவருமான பைசல் எதி கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை நேரில் சந்தித்து கொரோனா நிவாரணத் தொகையாக ஒரு கோடி ரூபாய் வழங்கினார் . இந்த சந்திப்புக்குப் பிறகு பைசல் எதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, அவர் தற்போது இஸ்லாமாபாத்தில் உள்ளன தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் , இந்நிலையில் அவர் நலமாக உள்ளார் எனவும் அவரை தற்போது தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
.
இந்நிலையில் பைசல் எதி, பிரதமரை சந்தித்த நிலையில் பிரதமருக்கும் கொரோனா தொற்று இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது . இதனால் பிரதமர் இம்ரான்கான் முன்வந்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் , அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அந்நாட்டு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய பிரதமர் ஒப்புக் கொண்டதாக அவரது உதவியாளர் அக்பர் தெரிவித்துள்ளார் . இம்ரான் கான் நாட்டின் பொறுப்புமிக்க குடிமகன் என்பதை நிரூபிக்க விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார் .