கொரோனா இனிதான் கோரத்தைக் காட்டப்போகுது... இப்போ ஊரடங்கை தளர்த்தாதீங்க... உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை!

By Asianet TamilFirst Published Apr 21, 2020, 8:54 PM IST
Highlights

“கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக நீங்கும் முன்பே ஊரடங்கை தளர்த்தினால், கொரோனா தாக்கம் மீண்டும் உயிர்ப்பித்துவிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தற்போது நிலவும் அவலங்களைவிட மிக மோசமான சூழலை உலகம் சந்திக்க நேரிடும். ஊரடங்கு உத்தரவை தளர்த்த இது சரியான நேரமல்ல. வைரஸ் பரவலை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதில் உலகில் உள்ள ஒவ்வொரு அரசும் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயல்படவேண்டிய தருணம்” என்று தக்கேஷி தெரிவித்தார்.
 

கொரோனா வைரஸின் மூலம் ஏற்படபோகும் மிக மோசமான விளைவுகள் இனிமேல்தான் வரப்போகிறது என உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.
சீனாவிலிருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் சூறையாடிவருகிறது. கொரோனா தொற்றால் 180-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரமும் படுபாதாளத்துக்கு சென்றுவருகிறது. கொரோனா வைரஸை எதிர்கொள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் லாக்டவுன்களை அறிவித்துள்ளன. ஆனாலும், உலகில் வல்லரசு நாடுகளும் பணக்கார நாடுகளும் கொரோனா வைரஸால் ஆட்டம் கண்டுள்ளன.
வளர்ந்த நாடுகளுக்கே இந்த நிலை என்றால், வளாரும் நாடுகளின் நிலையை சொல்லிமாளாது எனும் அளவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து லாக்டவுன்கள் நீடிக்கும்பட்சத்தில் பசி, பட்டினி ஏற்படும் அபாயமும் வளரும் நாடுகளில் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், சில நாடுகள் லாக்டவுன்களை தளர்த்தும் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் டெக்சாஸ், ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்கள், ஐரோப்பியாவில் சில நாடுகளில் ஊரடங்கை சற்று தளத்த திட்டமிட்டு வருகின்றன. இந்தியாவிலும் சில  தொழில்கள் செயல்படும் அளவுக்கு ஏப்ரல் 20 முதல் ஊரடங்கில் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில் ஊரங்கு உத்தரவை தளர்த்தும் நடவடிக்கைகளை சில நாடுகள் மேற்கொண்டுவருவதற்கு உலக சுகாதார நிறுவனம் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கத்திய பசிபிக் பிராந்திய இயக்குநர் மருத்துவர் தக்கேஷி கசாய் அச்சம் தெரிவித்துள்ளார். “கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக நீங்கும் முன்பே ஊரடங்கை தளர்த்தினால், கொரோனா தாக்கம் மீண்டும் உயிர்ப்பித்துவிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தற்போது நிலவும் அவலங்களைவிட மிக மோசமான சூழலை உலகம் சந்திக்க நேரிடும். ஊரடங்கு உத்தரவை தளர்த்த இது சரியான நேரமல்ல. வைரஸ் பரவலை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதில் உலகில் உள்ள ஒவ்வொரு அரசும் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயல்படவேண்டிய தருணம்” என்று தக்கேஷி தெரிவித்தார்.


இதேபோல ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் ஆதானம், “கொரோனா வைரஸ் பற்றிய போதிய புரிதல் இன்னும் பொதுமக்களிடையே சரிவர ஏற்படவில்லை. இந்த வைரஸின் மூலம் ஏற்படபோகும் மிக மோசமான விளைவுகள் இனிமேல்தான் வரப்போகிறது” என எச்சரித்துள்ளார்.

click me!