
Shehbaz Sharif 14 crore to Masood Azhar: சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1 பில்லியன் டாலர் கடனைப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தலைவர் மசூத் அசாருக்கு ரூ.14 கோடி இழப்பீடு வழங்க பாகிஸ்தான் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழித்த இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட மசூத் அசார் குடும்பஉறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளதாக தி ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை கடுமையான எதிர்வினைகளை எழுப்பியுள்ளது, ஏனெனில் பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு தொடர்ந்து அடைக்கலம் அளித்து ஆதரவளித்து வருகிறது. இது பயங்கரவாத புகலிட நாடாக தன்னைத் தானே உறுதிபடுத்துகிறது. இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களை ஏற்பாடு செய்வதில் நீண்ட காலமாக முக்கிய நபராக இருந்து வரும் அசார், இப்போது பாகிஸ்தானின் சமீபத்திய சர்ச்சைக்குரிய முடிவால் மேலும் பயனடைவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமாபாத் மசூத் அசாரின் அனைத்து பயங்கரவாத செயல்களுக்கும் ஊக்கம் அளித்து வருகிறது.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தலும் மசூத் விடுவிப்பும்
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814, 1991 ஆம் ஆண்டு கடத்தப்பட்டது. இந்த விமானத்தின் பயணிகளை விடுவிப்பதற்காக மசூத் அசார் இந்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போதிருந்து, இந்தக் குழு இந்தியாவில் மிகவும் பேரழிவு தரும் பயங்கரவாத தாக்குதல்களில் சிலவற்றில் தொடர்புடையது. 2000 ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற குண்டுவெடிப்பு, 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தற்கொலை குண்டுவெடிப்பு என்று கூறலாம். இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத அசார் குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஐந்து குழந்தைகள் அடங்குவர்.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, மசூத் அசார் இறந்த குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ.1 கோடி பெற தகுதியுடையவர். சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இது உலக சமுதாயத்துக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனெனில் இந்தியாவின் துல்லியமான தாக்குதல்கள் பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்தன. பொதுமக்களை அல்ல. இந்த பெரும் இழப்புக்கு பதிலளிக்கும் விதமாக, மசூத் அசார் தானும் இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறினார். பழிவாங்குவதாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு IMF ஆதரவு
பாகிஸ்தானின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்திற்கு EFF-இன் கீழ் நிதி வழங்குவதற்கு IMF ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் இந்தியாவின் கடுமையான ஆட்சேபனை இருந்தபோதிலும் மொத்த நிதியுதவி சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (SDR 1.52 பில்லியன்) உயர்ந்தது. இந்தியா வாக்களிப்பில் இருந்து விலகியது. பாகிஸ்தானின் மோசமான அணுகுமுறை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி தவறாகப் பயன்படுத்தப்படும் என்று இந்தியா எடுத்துக் கூறியது. சீர்திருத்தங்களுக்குப் பதிலாக பாகிஸ்தான் இந்த கடன் நிதியை ராணுவக் கட்டுப்பாடு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் என்று இந்தியா IMF-ஐ எச்சரித்து இருந்தது.
இந்தியா உன்னிப்பாக கண்காணிப்பு
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் அதிர்ச்சியடைந்த பிறகு, ஆதம்பூர் உள்ளிட்ட முக்கிய இந்திய விமானத் தளங்களை தாக்குவதற்கு பாகிஸ்தான் பலமுறை முயற்சித்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தார். "எதிரி நம்மை மீண்டும் மீண்டும் குறிவைத்தார். ஆனால் அவர்களின் தீய செயல்கள் தோற்கடிக்கப்பட்டன," என்று அவர் கூறினார்.
இந்தியாவின் கொள்கை மாற்றம்: பிரதமர் மோடி
பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடுபவர்களுக்கும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் இடையே இந்தியா இனி வேறுபாட்டைப் பார்க்காது என்றும் அவர் பயங்கரவாத அமைப்புகளையும் அவற்றின் ஆதரவாளர்களையும் எச்சரித்தார். "சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, இப்போது ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கையாகும். இது பாகிஸ்தானுக்கு புதிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானுடனான ராணுவ நடவடிக்கையை மட்டுமே இந்தியா இடைநிறுத்தியுள்ளது என்றும் மேலும் ஏதேனும் 'பயங்கரவாத தாக்குதல்' நடந்தால் திருப்பி தாக்கப்படும் என்றும் பிரதமர் மோடி எச்சரித்தார்.