
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 26 பேரைக் கொல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முன்னணி விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம், பஹல்காம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை படம் பிடிப்பதற்காக உயர் தொழில்நுட்பம் கொண்ட செயற்கைக்கோள் படங்களுக்கான ஆர்டர்களில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
பஹல்காம் செயற்கைக்கோள் படங்களுக்கான ஆர்டர்
காஷ்மீரில் இருக்கும் பஹல்காம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்த தாக்குதலில் 26 பேர் பலியாயினர். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகள் மீது இந்தியாவின் முப்படைகளும் கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை பயங்கர தாக்குதலை நடத்தி இருந்தது. பஹல்காம் சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, பிப்ரவரி 2 மற்றும் 22, 2025 க்கு இடையில், குறைந்தது 12 ஆர்டர்கள் - வழக்கமான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு மேக்ஸர் டெக்னாலஜிஸுக்கு வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் நிறுவனம் ஆர்டர் கொடுத்தா?
மேக்ஸர் டெக்னாலஜியின் வாடிக்கையாளர் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் அடங்கும். மேக்ஸர் ஆர்டர் பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 2024 இல் பஹல்காம் செயற்கைக்கோள் படங்களுக்கான ஆர்டர்கள் இணையம் மூலமாக தெரிய வந்துள்ளது. பஹல்காம் செயற்கைக்கோள் படங்களுக்கான ஆர்டர்கள் பாகிஸ்தான் நிறுவனமான பிசினஸ் சிஸ்டம்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (BSI) ஆல் வழங்கப்பட்டதா என்பது அந்த இணையத்தில் தெரியவில்லை. ஆனால் தி பிரின்ட் செய்தி நிறுவனத்துடன் பேசிய பாதுகாப்பு ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள், நிறுவனத்தின் நிறுவனர் ஒபைதுல்லா சையத்தின் பதிவுகளைக் கருத்தில் கொண்டு அது தற்செயலான நிகழ்வு என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
யார் இந்த ஒபைதுல்லா சையத்?
பாகிஸ்தான்-அமெரிக்க தொழிலதிபரான ஒபைதுல்லா சையத் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அமெரிக்காவிலிருந்து உயர் செயல்திறன் கொண்ட கணினி உபகரணங்கள் மற்றும் மென்பொருள் பயன்பாட்டு ரகசியங்களை பாகிஸ்தான் அணுசக்தி ஆணையத்திற்கு (PAEC) சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க நீதிமன்றத்தால் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இந்த நிறுவனம்தான் உயர் வெடிபொருட்கள் மற்றும் அணு ஆயுத பாகங்களை வடிவமைத்து சோதிக்கும் மற்றும் திட எரிபொருள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய அழுத்தம் கொடுக்குமா?
''எந்தவொரு பின்னணி சரிபார்ப்பும் இல்லாமல் மாக்ஸர் சாட்டிலைட் நிறுவனம் பாகிஸ்தான் உடன் கூட்டணி வைத்துக் கொள்வது தவறானது. இந்தியா அத்தகைய செயற்கைக்கோள் படம் மற்றும் தரவு நிறுவனங்களை பாகிஸ்தானுடனான செயல்பாடுகளை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்'' என்று மாக்ஸர் சேவை பெறும் நிறுவனத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
மாக்ஸர் இணையத்தில் இந்தியாவின் ரகசிய இடங்கள்
மாக்ஸர் இணையத்தில், பஹல்காமைத் தவிர, புல்வாமா, அனந்த்நாக், பூஞ்ச், ரஜோரி மற்றும் பாரமுல்லாவின் சில பகுதிகளையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இவை அனைத்தும் இந்தியாவில் ராணுவ ரீதியாக முக்கியத்துவம் பெற்ற இடங்கள். ஒவ்வொரு செயற்கைக்கோள் படத்தின் விலை ரூ.3 லட்சத்தில் தொடங்கி இடங்களுக்கு தகுந்தவாறு அதிகரிக்கிறது என்று தி பிரின்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் உலகெங்கிலும் மேம்பட்டு இருக்கும் நிலையில், ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு இந்த செயற்கைக்கோள் படங்கள் பயன்படுத்தப்பட்டிருக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இதுகுறித்து மாக்ஸர் நிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு இந்தியா கேட்கலாம் என்ற கருதும் எழுந்துள்ளது.
இந்த உயர் தொழில்நுட்ப படங்கள் பெரும்பாலும் துருப்புக்களின் நடமாட்டம், ஆயுத இருப்பிடங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, சட்டவிரோத எல்லை மீறல்களை கண்டறிதல், அங்கீகரிக்கப்படாத ஊடுருவல்கள் மற்றும் கடத்தல் போன்றவற்றைக் கண்காணிக்க பாதுகாப்பு நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி தவறாக பகிரப்படும் படங்களால் நாடுகளுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.