பெண்களின் உரிமைகளை முழுவதும் தட்டிப் பறித்து அடக்கி வரும் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு, ஹிஜாப் அணியாமல் பாகிஸ்தானில் இருந்து சென்று இருந்த பெண் அமைச்சரை வரவேற்றது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்று இருந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் இஸ்லாம் மரப்புபடி ஹிஜாப் அணிந்து செல்லவில்லை. அதாவது தனது தலையை துணியால் மூடிச் செல்லவில்லை. அவர் விமானத்தில் இருந்து இறங்கும்போது ஹிஜாப் இல்லை. இது தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. பலரும் சமூக ஊடகங்களில் இதை விமர்சித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து கடைபிடிக்க முடியாது என்று 'தெரிக் இ பாகிஸ்தான் தலிபான்' என்ற தீவிரவாத அமைப்பு அறிவித்த நிலையில் காபூல் நகருக்கு ஹினா ரப்பானி பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி தலிபான் தீவிரவாதிகள் ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்களது ஆட்சியை இன்னும் உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் எல்லையில் ஒரு மாத கால போர் நிறுத்தத்தை இனி கடைப்பிடிக்க மாட்டோம் என்று 'தெரிக் இ பாகிஸ்தான் தலிபான்' தீவிரவாதிகள் அறிவித்த மறுநாளே ஆப்கானிஸ்தானுக்கு ஹினா ரப்பானி சென்று இருந்தார்.
இருநாட்டு எல்லையில் அடிக்கடி 'தெரிக் இ பாகிஸ்தான் தலிபான்' தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதை தணிக்கும் வகையில் கடந்தாண்டின் பிற்பகுதியில் இருந்து 'தெரிக் இ பாகிஸ்தான் தலிபான்' தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகளை ஆப்கானிஸ்தான் அரசு செய்து கொடுக்கிறது.
இதன்படி, ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல் எதுவும் இல்லை.
Pakistan sends it woman Foreign Minister, Hina Rabban Khar to Kabul, Afghanistan. Taliban have not allowed girls to go to school yet. Khan doesn’t even cover her head while meeting Taliban host. Is there a message? pic.twitter.com/HW8aN87FRE
— Ashok Swain (@ashoswai)“கல்வி, சுகாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு, பிராந்திய இணைப்பு, மக்களிடையேயான தொடர்பு மற்றும் சமூகப் பொருளாதாரத் திட்டங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பொதுவான இருதரப்பு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன,” என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முத்தாகி இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், போக்குவரத்து, பயணிகளுக்கான வசதிகளை விரைவுபடுத்துதல் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் கைதிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகளை எழுப்பினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து வர்த்தகம் மற்றும் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்த முக்கிய ஆப்கானிஸ்தான் எல்லை ஒன்றை பாகிஸ்தான் இந்த மாதம் மீண்டும் திறந்துள்ளது. இதன் வழியாகத்தான் பலுசிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் காந்தகாருக்கு வர்த்தக தொடர்பை வைத்துக் கொள்ள முடியும் என்பதால் இது மட்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2021 -ல் ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியதில் இருந்து, தங்களது பாதுகாப்புப் படையினருக்கும் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது என்றும், மேலும், தீவிரவாதிகள் பாகிஸ்தான் படைகளைத் தாக்கி வந்தனர் என்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை தாலிபான்கள் நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க தலிபான்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஐ.நா. மற்றும் மேற்கத்திய நாடுகள் பெண்களின் உரிமைகள் குறித்த போக்கை மாற்றிக் கொள்ளுமாறு தலிபான்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நேரத்தில், பாகிஸ்தானின் தூதுக்குழுவிற்கு ஒரு பெண் தலைமை தாங்குகிறார், அவரையும் தலிபான்கள் வரவேற்கின்றனர். இது எந்த வகையில் சரியானது என்று நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டுப் பெண்களை இன்னும் பள்ளிக்கு செல்வதற்கு அந்த நாட்டின் தலிபான் அரசு அனுமதிக்கவில்லை. பெண்களின் சுதந்திரம் முழுவதும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலிபான்கள் இஸ்லாம் மற்றும் ஆப்கானிஸ்தான் கலாச்சாரத்திற்கு ஏற்ப பெண்களின் உரிமைகளை மதிக்கிறோம் என்று கூறி வருகின்றனர்.
தலிபான்களை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. ஆகஸ்ட் 2021-ல் தலிபான்கள் மிக எளிதில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர், இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார் மற்றும் அவரது அரசாங்கம் வீழ்ந்தது.