Pakistan Election 2024 : நவாஸ் ஷெரீப் தனது கட்சி எத்தனை இடங்களை வென்றுள்ளது என்பதை வெளியிடாமல், தங்களுடைய கட்சி வெற்றியடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசியத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றதாகக் கூறியுள்ளார். வாக்கெடுப்பில் தனது அரசியல் கட்சி மிகப்பெரியதாக உருவெடுத்துள்ளது என்றும் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார். ஆனால் வாக்குப்பதிவு நடைபெற்ற 265 இடங்களில், இன்னும் சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் குழுவால் வெளியிடப்பட்ட சமீபத்திய எண்ணிக்கை அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) 42 இடங்களை வென்றதைக் காட்டுகிறது, இது அரசாங்கத்தை அமைக்க உரிமை கோருவதற்குத் தேவையான 133 என்கின்ற அளவை விட மிக மிகக் குறைவு. கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது குறித்து பேசுவதற்காக அவரது பிரதிநிதிகள் மற்ற அரசியல் கட்சிகளைச் சந்திப்பார்கள் என்று திரு ஷெரீப் கூறினார்.
இந்த பாகிஸ்தான் தேர்தலை பொருத்தவரை இம்ரான் கானின் கட்சி, அவர் சிறையில் உள்ள காரணத்தினால் முடக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வருகின்றனர். அதேபோல இம்ரான் கானின் வேட்பாளர்கள் தான் பெரிய அளவில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.
ஆனால் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அந்த சுயேச்சை வேட்பாளர்களை தனது கட்சியின் பக்கம் இழுத்து வெற்றியை நிலைநாட்டிக்கொள்ள நினைப்பதாகவும் சில தகவல்கள் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள மக்கள் கட்சியும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தேர்தலில் தங்கள் கட்சியை வெற்றி பெற்றுள்ளதாக நவாஸ் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.