
துருக்கியின் இஸ்தான்புல்லில் பாகிஸ்தானுக்கும் ஆப்கான் தலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் சில கோரிக்கைகளை ஆப்கான் பிரதிநிதிகள் கடுமையாக எதிர்த்ததாக ஆப்கானிஸ்தான் ஊடக நிறுவனமான டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர். இஸ்தான்புல்லில் ஆப்கான் தாலிபான்களுடனான நான்கு நாள் பேச்சுவார்த்தை எந்த வெற்றியும் இல்லாமல் முடிவடைந்ததாக பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து தரார் கூறுகையில், ‘‘நாட்டை குறிவைக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானின் ஒத்துழைப்பை பாகிஸ்தான் நீண்ட காலமாக நாடினோம். ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் போராளிகளுக்கு மீண்டும் மீண்டும் ஆதரவளிப்பதால் பாகிஸ்தானின் அயராத முயற்சிகள் பயனற்று போகிறது. ஆப்கானிஸ்தான் மக்களை தேவையற்ற போரில் இழுத்து சிக்க வைக்க தலிபான்கள் விரும்புகின்றனர்.
பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்தும் டிடிபி மற்றும் பிஎல்ஏ போன்ற தீவிரவாத குழுக்களை தாலிபான்கள் ஆதரிக்கின்றனர். நான்கு ஆண்டுகளில் இவ்வளவு பெரிய உயிர், பொருள் இழப்பைச் சந்தித்த பிறகு பாகிஸ்தானின் பொறுமை தீர்ந்துவிட்டது. கத்தார், துருக்கி போன்ற சகோதர நாடுகள் அமைதிக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில், தோஹா மற்றும் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் பங்கேற்றது.
பாகிஸ்தானின் பாதுகாப்பு மிக முக்கியமானது. கத்தார் மற்றும் துருக்கிக்கு நன்றி. பாகிஸ்தானுக்கு அதன் மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. பயங்கரவாதிகள், அவர்களின் பாதுகாப்பான புகலிடங்கள், அவர்களை ஆதரிப்பவர்களை ஒழிக்க பாகிஸ்தான் அரசாங்கம் தேவையான அனைத்து வளங்களையும் தொடர்ந்து பயன்படுத்தும்’’ என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்களை நிறுத்தவும், அமெரிக்க ட்ரோன் விமானங்களை நிறுத்தவும் தலிபான் பிரதிநிதிகள் பாகிஸ்தானிடம் கோரியதாக ஆப்கானிஸ்தான் வட்டாரங்களை மேற்கோள் காட்டி டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் பாகிஸ்தான் அதை ஏற்க மறுத்துவிட்டது. டிடிபியை பயங்கரவாதக் குழுவாக அறிவித்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் ஆப்கான் தாலிபான்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிடிபி-க்கு எதிராக ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானின் கோரிக்கையை தாலிபான் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த உத்தரவுகளின் அடிப்படையில் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் மாற்றியதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒரு இராணுவ மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் முன்பு மிரட்டியிருந்தார்.