
ஆப்பிரிக்க நாடான கேமரூனில் கடந்த அக்டோபர் 12 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபரும், 92 வயதானவருமான பால் பியா வெற்றி பெற்றதாக அந்நாட்டின் அரசியல் சாசன கவுன்சில் (Constitutional Council) திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அரசியல் சாசன கவுன்சில் அறிவித்தபடி, அதிபர் பால் பியா 53.66% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக, முன்னாள் கூட்டாளியான இசா சி’ரோமா பக்ரி (Issa Tchiroma Bakary) 35.19% வாக்குகளைப் பெற்றார். தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் 57.7% ஆகும்.
தேர்தல் முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், குறைந்தது நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்தனர்.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, முடிவுகளை நம்பத்தகுந்த வகையில் வெளியிடக் கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் டூவாலாவில் (Douala) நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த போராட்டக் களத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டது.
உலகிலேயே மிகவும் வயதான அதிபராக 1982-ஆம் ஆண்டு முதல் நாட்டை ஆட்சி செய்துவரும் பால் பியா, மீண்டும் ஒரு முறை பதவிக்கு வர எடுத்த இந்த முடிவு, இளைஞர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேமரூன் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 70%-க்கும் அதிகமானோர் 35 வயதுக்குக் குறைவானவர்கள். நாட்டில் எண்ணெய் வளம் இருந்தும், உயர் வகுப்பினர் மட்டுமே செழிப்பாக இருப்பதாகப் பெரும்பாலான இளைஞர்கள் நம்புகின்றனர். 18 முதல் 35 வயதுடைய தொழிலாளர்களில் 57% பேர் முறைசாரா வேலைகளில் (informal jobs) உள்ளனர்.
அதிபர் பால் பியா, தனது வலுவான போட்டியாளரைத் தகுதி நீக்கம் செய்த, தேர்தல் நடைமுறைகளைத் தன் விருப்பப்படி கையாண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றியைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
வெற்றி பெறுவோம் என முன்னதாகக் கூறிவந்த எதிர்க்கட்சி வேட்பாளரான சி’ரோமா, போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சமூக வலைத்தளத்தில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள் குறித்து அதிபர் பால் பியா வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பால் பியாவின் சமீபத்திய வெற்றி, கேமரூன் நாட்டில் பழமையான தலைமைக்கும், இளம் மக்களுக்கும் இடையேயான பிளவை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது. நாடு குழப்பமான நிலைக்குச் செல்லக்கூடிய அபாயம் உள்ளதாகப் பியூவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியிர் எமில் சுன்ஜோ கவலை தெரிவித்துள்ளார்.