இந்தியாவில் இருந்து தூதரக அதிகாரிகள் 6 பேரை திரும்பப் பெற்றது பாகிஸ்தான் : உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எதிரொலி

Asianet News Tamil  
Published : Nov 03, 2016, 11:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
இந்தியாவில் இருந்து தூதரக அதிகாரிகள் 6 பேரை திரும்பப் பெற்றது பாகிஸ்தான் : உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எதிரொலி

சுருக்கம்

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி உளவு பார்த்து கைதான சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தூதரக அலுவலகத்தில் இருந்து மேலும் 6 அதிகாரிகளை நேற்று திரும்பப் பெற்றது பாகிஸ்தான் அரசு.

இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அலுவலகத்தில் இருந்து 6 பேர் திரும்ப அழைக்கப்பட்டார்கள் என்று அந்நாட்டு தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உளவு பார்த்த அதிகாரி

பாகிஸ்தான் தூதரகத்தின் விசா பிரிவில் பணியாற்றுபவர் மெகமூத் அக்தர். இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்காக, இந்தியாவில் தொடர்ந்து உளவு பார்த்து வந்த அவரை கடந்த மாதம் 26-ந்தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர்.  விசாரணையின் போது அவர் மேலும் சில அதிகாரிகள் உளவு பார்த்ததாக கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணை முடிந்ததும் அக்தரை நாட்டை விட்டு வெளியேற அரசு உத்தரவிட்டது.

பதற்றம்

 பதில் நடவடிக்கையாக இரு இந்திய அதிகாரிகளை இஸ்லாமாபாதில் இருந்து பாகிஸ்தான் அரசு வெளியேற்றது. இந்த சம்பவம், மற்றும் கடந்த சில நாட்களாக எல்லையில் நடந்து வரும் தாக்குதல்கள் ஆகியவற்றால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

6 பேர்

இந்நிலையில், நேற்று டெல்லியில் உள்ள தூதரகத்தில் இருந்து தனது அதிகாரிகள் 6 பேரை திரும்ப அழைத்துக்கொண்டது பாகிஸ்தான் அரசு. இவர்கள் பாகிஸ்தான் வாகா எல்லையில் வெளியேறினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

உகந்தசூழல் இல்லை

இது குறித்து தூதரக வட்டாரங்கள் கூறுகையில், “ இந்தியாவில் பணியாற்ற முடியாத அளவுக்கு சூழ்நிலை சீர்குலைந்து இருப்பதால், தூதரக அதிகாரிகளை வெளியேற பாகிஸ்தான் அரசு முடிவு எடுத்தது. இந்திய அரசு, எங்கள் தூதரக அதிகாரிகளை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த நாட்டில் தங்கியிருந்து அதிகாரிகள் பணியாற்ற முடியாது'' எனத் தெரிவித்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் சயது பரூக் ஹபிப், முதன்மை செயலாளர்கள் காதிம் ஹூசைன், முடாசர் சீமா, சாகித் இக்பால் ஆகியோர் வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2 அதிகாரிகள் இந்தியா வருகிறார்கள்

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ராஜேஷ் அக்னிஹோத்ரி, பல்பிர் சிங் இந்தியாவின் ரா அமைப்புக்கு உளவு பார்த்ததாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியது. இவர்களின் புகைப்படத்தையும் பாகிஸ்தானில் உள்ள செய்தி தொலைக்காட்சிகள் அடிக்கடி வெளியிட்டு செய்தி வெளியிட்டு வந்தன. இவர்கள் இருவரும் தூதரகத்தில் பணியாற்றிக்கொண்டு உளவு பார்த்ததாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து, பல்பிர்சிங், அக்னிஹோத்ரி இருவரும் இந்தியா வர இருக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

2 விநாடிகளில் 700 கிமீ வேகம்.. உலகின் அதிவேக ரயில்.. சீன மேக்லெவ் 700 கிமீ சாதனை
இரவு நேரத்தில் நிலநடுக்கம்.. அலறியடித்து வெளியே ஓடிய மக்கள்.. நடுங்கிய தைவான்.. என்ன ஆச்சு?