
குடியிரசு தலைவர் பிரணாப் முகர்ஜி 3 நாள் அரசுப் பயணமாக ேநபாளம் நாட்டுக்கு நேற்று சென்றார். கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின் இந்திய குடியரசுத்தலைவர் ஒருவர் அங்கு செல்வது இது முதல்முறையாகும்.
உறவு பலப்படுத்தும்
சார்க் அமைப்பின் தலைவராக இருக்கும் நேபாள நாடு, கடந்த செப்டம்பர் காஷ்மீர் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, இந்தியாவுக்கு ஆதரவாக கருத்துக் கூறியது. அதேசமயம், பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மனக்கசப்பான நிகழ்வுகளால் அந்நாட்டில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இந்த சூழலில் குடியரசுத் தலைவர்பிரணாப்பின் அநாட்டு பயணம் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்தும்.
பயணம்
டெல்லியில் இருந்து 3நாள் பயணமாக நேற்று காலை நேபாளத்துக்கு புறப்பட்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
வரவேற்பு
காத்மாண்டு நகரில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரணாப் முகர்ஜிக்கு ,சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி பூங்கொத்து வரவேற்றார். அதன்பின் நேபாள அரசு தரப்பில் அளிக்கப்பட்ட ராணுவ மரியாதையையும் பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தலைவர் பிரணாப் வருகையையொட்டி, அந்நாட்டில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டு, தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
வழிபாடு
மேலும், இந்த பயணத்தில் பிரணாப் முகர்ஜி நேபாளத்தின் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்துகிறார். நாளை வரலாற்று சிறப்பு மிக்க பசுபதிநாத் கோயிலுக்கும், ஜனக்பூரில் உள்ள ராம் ஜானகி கோவிலுக்கும் சென்று பிரணாப் வழிபாடு நடத்துகிறார்.
நேபாள பிரதமர் புஷ்பா கமல் தால் பிரசண்டா, மற்றும் அதிபர் பண்டாரி ஆகியோர் பிரணாப் முகர்ஜிக்கு சிறப்பு விருந்து அளிக்க இருக்கின்றனர்.
உதவி
இணைச்செயலாளர் சுதாகர் தலேலா கூறுகையில், “ நேபாளத்தின் வளர்ச்சிக்கு ஏறக்குறைய ரூ. 6,600 கோடி (100 கோடி டாலர்) நிதியுதவியை இந்தியா அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் நடக்கும் பொருளாதார திட்டங்கள், வளர்ச்சி, சாலை இணைப்பு திட்டங்களில் இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது. இந்தியத் தலைவரின் இந்த பயணத்தில் இருநாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகள், பிராந்திய, சர்வதேச விஷயங்கள் குறித்து பேசப்படும். பிராந்தியத்தில் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
பிராணாப் முகர்ஜியின் இந்த பயணத்தில் அமைச்சர்கள் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே, எம்.பி.கள் புவனேஷ்வர் கலிதா, இல.கணேசன், ஜகதாம்பிகா பால், ஆர்.கே.சிங், வெளியுறவுச்செயலாளர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் சென்றுள்ளனர்.