பாகிஸ்தானை இந்தியாவால் மட்டுமே காப்பாற்ற முடியும்.. சொந்த நாட்டுக்கு புத்தி சென்ன கோட்டீஸ்வரர்.

By Ezhilarasan Babu  |  First Published Feb 5, 2022, 7:02 PM IST

இந்தியாவுடனான பிரச்சினைகளை பாகிஸ்தான் பேசித் தீர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இருநாடுகளுக்கும் இடையே 1965 போர் வரை பாகிஸ்தானின் மொத்த வர்த்தகத்தில் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை இந்தியாவுடன் நடந்தது.


இந்தியாவுடனான பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் பாகிஸ்தானின் பொருளாதார  சிக்கலையும் தீர்க்க முடியாது, அது பாகிஸ்தானில் அழிவை ஏற்படுத்திவிடும் என அந்நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான நிஷாத் குழுமத்தின் தலைவர் மியான் முகம்மது மன்ஷா தெரிவித்துள்ளார். அவரின் இந்தக் கருத்து பாகிஸ்தான் திவாலாகும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் வெளியாகி உள்ளது. அவரின் இந்த பேச்சு சர்வதேச அளவில் கவனத்தைப் ஈர்த்துள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எல்லையில் பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது முதல், அதாவது 2019ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவு தடைப்பட்டுள்ளது. அப்போதே பாகிஸ்தான் தூதரக ரீதியிலான உறவையும் முறித்துக் கொண்டது. அன்று முதல் இன்று வரை இரு நாடுகளுக்குமான எல்லை மோதலும் வழக்கத்துக்கு மாறாக இந்த வருகிறது. சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு எல்லையில் இந்தியாமீது தாக்குதல் நடவடிக்கைகளை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. மறுபுறம் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்புகள் எல்லையில் ஊடுருவி  சதிவேலைகளை அரங்கேற்ற முயன்று வருகின்றன. ஆனால் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் அதை முறியடித்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில்தான் பாகிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம், பசி பஞ்சம் தலை விரித்தாட தொடங்கியுள்ளது. நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் அந்நாடு திவால் ஆகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே கடன் மேல் கடன் வாங்கி வட்டி கட்ட முடியாத நிலையில் சிக்கிக்கொண்டுள்ள பாகிஸ்தான் மீண்டும் பிரச்சினையிலிருந்து தப்பிக்க சீனா, சவுதி அரேபியா போன்ற நாடுகளிடம் கடன் கேட்டு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் கராச்சியை தலைமையிடமாகக் கொண்ட நிஷாத் குழுமத்தின் தலைவரும், பாகிஸ்தானின் மிகப்பெரும் செல்வந்தர்களின் ஒருவருமான மியா முகம்மது மன்ஷா,  லாகூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை சேம்பரில் கடந்த புதன்கிழமை நடந்த வர்த்தகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான்- இந்தியாவில் அவரின் பேச்சு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அவர் பேசியிருப்பதாவது:- சமீப காலமாக பாகிஸ்தான் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்கு ஒரே வழி இந்தியாவுடனான உறவை பழையபடி பாகிஸ்தான் புதுப்பிக்க வேண்டும். இந்தியாவுடனான பிரச்சினைகளை பாகிஸ்தான் பேசித் தீர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இருநாடுகளுக்கும் இடையே 1965 போர் வரை பாகிஸ்தானின் மொத்த வர்த்தகத்தில் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை இந்தியாவுடன் நடந்தது. எத்தனை மோதல்கள் ஏற்பட்டாலும் வர்த்தகம் உறவு என்பது தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தடைப்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் பாகிஸ்தானின் பொருளாதாரம் மேம்பட வில்லை என்றால் பாகிஸ்தான் பேரழிவை சந்திக்க நேரிடும். இந்தியாவுடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப பிராந்திய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். ஐரோப்பா இரண்டு பெரிய போர்களை நடத்தியது, ஆனால் இறுதியில் அமைதி மற்றும் பிராந்திய வளர்ச்சிக்காக முயற்சிகளை மேற்கொண்டு அங்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

எனவே பிராந்தியத்தில் நிரந்தர பகை என்பது இல்லை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் தனி நபர் குழுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலையை பாகிஸ்தான் உருவாக்க முடியும், பாகிஸ்தானுக்கு இப்போது அமைதி தேவை, இந்தியாவிடம் தொழில்நுட்பம் உள்ளது,  பாகிஸ்தானிலும் இந்தியாவுக்கு வழங்க கூடிய சில விஷயங்களை வைத்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் உறவை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் இரு நாடுகளும் பயனடைய முடியும்.  இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிக அளவில் மருத்தும் சார்ந்த மருந்து பொருட்கள் கிடைத்து வந்தன, இப்போது அது தடைபட்டுள்ளதால் அதிக விலைக்கு வெளியிலிருந்து வாங்க நேரிடுகிறது. தற்போதுள்ள நிலையில் இந்தியாவுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்  கொள்வதன் மூலம் நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீள முடியும்.

ஆனால் இரு நாடுகளும் மறைமுகமாக தொடர்பில் இருந்து வருவதாகவே தெரிகிறது. இரு நாட்டுக்கும் சுமுகமான உறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மறைமுகமாக நடந்து வருகிறது, அதில்  சுமுக முடிவு எடுக்கப்பட்டால் இன்னும் ஒரு மாதத்தில் இந்திய பிரதமர் பாக்கிஸ்தான் வர வாய்ப்புள்ளது. இது தொடர்பாக திரைமறைவில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று எனக்கு தெரியும் என மான்ஷா ஆங்கிலம் மற்றும் உருது கலந்து பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் பரபரப்பு செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. 
 

click me!