அமெரிக்காவில் 20 மாகாணங்கள் அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அங்கீகரித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கொண்டாடி மகிழும் பொங்கல் திருநாளையொட்டி, கனடா அரசு ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக அறிவித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா ஆளுநர் ராய் கூப்பர், அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அண்மையில் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஃபுளோரிடா, ஜார்ஜியா, நியூஜெர்சி, மாசாசூசெட்ஸ், டெக்சாஸ் உள்பட அமெரிக்காவில் 20 மாகாணங்கள், 28 நகரங்கள் அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அங்கீகரித்துள்ளன.
இந்தியா உள்பட உலகெங்கும் வாழும் இந்து மக்கள் அக்டோபர் மாதத்தில்தான் நவராத்திரி, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தற்போது அமெரிக்க மாகாணங்கள் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதத்தை இந்துக்கள் பாரம்பரிய மாதமாக அறிவித்து சிறப்பு சேர்த்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்து அமைப்புகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “அக்டோபா் மாதத்தில் நவராத்திரி, தசரா, துா்கா பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவதால், இந்து பாரம்பரிய மாதமாக அக்டோபரை கொண்டாட மிகவும் பொருத்தமாக இருக்கும். யோகாசனம், உணவு, நாட்டியம், இசை, அஹிம்சை, கொண்டாட்டம், கொடை என பல அம்சங்களை அமெரிக்கர்களின் வாழ்வியலில் இந்து மதம் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது. அக்டோபா் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடுவதை எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனா்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.