
அமெரிக்க அதிபர் ஒபாமா நரகத்துக்குதான் போக முடியும் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடர்டி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய அதிபராக கடந்த மேமாதம் ரோட்ரிகோ டூடர்டி பொறுப்பேற்றார். அந்நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் வகையில் கடத்தல்காரர்களுக்கு கடும் சிறை தண்டனையும், சில நேரங்களில் மரண தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 மாதங்களில் 3 ஆயிரம் பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் கைதிகளின் மனித உரிமை மீறல் பிரச்சினையை சர்வதேச நாடுகள் எழுப்பியுள்ளன. இது குறித்து அமெரிக்காவும் கேள்வி எழுப்பி வருகிறது.
சமீபத்தில் ஜி20 மாநாட்டில் அமெரிக்காவின் விமர்சனத்துக்கு பதில் அளித்த அதிபர் டூடர்டி, அதிபர் ஒபாமாவை ஓநாய்க்கு பிறந்தவர், வேசியின் மகன் என கடுமையாக திட்டித்தீர்த்தார். அந்த சர்ச்சை அடங்குவதற்கு இப்போது மீண்டும் ஒபாமாவை வசைபாடியுள்ளார்.
தலைநகர் மணிலாவில் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அதிபர் ரோட்ரிகோ டூடர்டி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ ஐரோப்பிய யூனியனும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் எங்கள் நாட்டில் நடக்கும் மனித உரிமைமீறல் குறித்து பேசுகிறார்கள். எங்களை குறைகூறும் முன் ஒபமா தனது பாதுகாப்புதுறையை ஆலோசனை செய்ய வேண்டும்.
ஒபாமா நீங்கள் நரகத்துக்குத்தான் போக முடியும். நரகம் முழுவதும் நிரம்பிவிட்டது. நீங்கள் முதலில் உங்கள் பாவங்களைக் கழுவுங்கள்.
நாங்கள் ஒருபோதும் தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்பாக, அமெரிக்காவுடன் இணைந்து கடல்வழியாக கூட்டுப்பயிற்சி நடத்த மாட்டோம்.'' என்று தெரிவித்தார்.