இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு … பகிர்ந்தளிக்கப்படுகிறது !!

By Selvanayagam PFirst Published Oct 8, 2019, 9:22 PM IST
Highlights

2019 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீபிள்,  மைக்கேல் மேயர் மற்றும்  டீடியர் க்யூலோஸ் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் விழா ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று  தொடங்கியது . இதில்  மருத்துவத்திற்கான நோபல் பரிசு வில்லியம் ஜி.கேலின், ஜார்ஜ் செமென்ஸா, சர் பீட்டர் ரெட் கிளிப் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கும், ஆக்ஸிஜன் அளவுக்குமான தொடர்பை கண்டறிந்ததற்காக மூவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டன. . அதன்படி, நோபல் பரிசின் ஒரு பகுதி ஜேம்ஸ் பீபிளுக்கும், மற்றொரு பகுதி மைக்கேல் மேயர், டீடியர் க்யூலோஸ் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 

இயற்பியல் அண்டவியல் பற்றிய கோட்பாடுகளை கண்டுபிடித்ததற்காக ஜேம்ஸ் பீபிளுக்கும், சூரியக் குடும்பத்தைப் போன்ற மற்றொரு நட்சத்திர குடும்பத்தைக் கண்டுபிடித்ததற்காக மைக்கேல் மேயர், டீடியர் க்யூலோஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற ஜேம்ஸ் பீபிள் கனடா நாட்டில் வின்னிபெக் நகரில் 1935ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்காவின் பிரின்செடோன் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். 

கோடிக்கணக்கான விண்மீன் திரள்களுடன் பிரபஞ்சம் உருவானது குறித்து எடுத்துச் சொன்னவர் ஜேம்ஸ் பீபிள். அவருடைய கோட்பாடுகள் இருபது வருடங்களாக உருவாக்கப்பட்டவை என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

நட்சத்திர குடும்பத்தை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றுள்ள மைக்கேல் மேயர், 1942ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள லாசென்னெ நகரில் பிறந்தவர். ஜெனிவா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

இதுபோல மற்றொருவரான டீடியர் க்யூலோஸ் ஜெனிவா பல்கலைக் கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அறியப்படாத உலகங்களான விண்வெளி மற்றும் பால்வீதியை இருவரும் ஆராய்ந்தனர். 1995 ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்திற்கு வெளியே ஒரு கோள் இருப்பதை கண்டுபிடித்தனர் என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

click me!