சாலமன் தீவுகளில் இன்று இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இரண்டாவது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று சாலமன் தீவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் நிலநடுக்கம் மலாங்கோ பகுதியிலிருந்து தென்மேற்கே 16 கிமீ (10 மைல்) தொலைவில், 15 கிமீ (9 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக இருந்தது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதையடுத்து, 30 நிமிடங்களுக்குப் பின்னர், 6.0 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்குப் பின்னர் சாலமன் நாட்டிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அந்த தீவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் கடல் நீரோட்டங்களில் அசாதாரண சூழல் இருப்பதால் கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இரண்டு பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிர்வுகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தீவு முழுவதும் பரவலாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. சாலமன் தீவுகள் முழுவதும் டிவி மற்றும் வானொலி சேவைகள் ஒளிபரப்பப்படவில்லை என்று பேஸ்புக்கில் சிலர் பதிவிட்டுள்ளனர். நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்ததாகவும், சேதம் குறித்த அறிக்கைகளுக்காக காத்திருப்பதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழப்பு 300 பேர் காயம்; மீட்புப் பணிகள் தீவிரம்!!
"ஹோனியாரா பகுதி மக்கள் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் உயரமான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். சிறிது நேரத்தில் கீழே வந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட சாலமன் தீவில் இருந்து தென்கிழக்கில் சுமார் 2,000 கிமீ தொலைவில் உள்ளது பிஜி தீவு. இங்கு உடனடியாக எந்த பாதிப்பும் உணரப்படவில்லை என்று அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.