
கத்தாரில் உள்ள இந்தியர்களின் உயிருக்கும் உடமைக்கும் எந்த பாதிப்பும் இல்லை என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அரபு நாடுகளில் அதிக எரிவாயு வளம் கொண்ட நாடுகளில் கத்தார் நாடும் ஒன்று. இந்த நாட்டுடன் அரபு நாடுகளான சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, அமீரகம், ஏமன் ஆகிய 5 நாடுகள் தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்தன.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கத்தார் மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை 5 அரபு நாடுகள் மேற்கொண்டுள்ளன. தூதரக உறவு துண்டிக்கப்பட்டதால் அந்த நாடுகள் கத்தாருடன் தங்களது விமான சேவைகள் மற்றும் கப்பல் சேவைகளையும் ரத்து செய்தது.
இதனால் அந்நாட்டில் வாழும் பல லட்சம் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியர்கள் எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும், . பல விமானங்கள் தங்களது சேவையை ரத்து செய்துள்ளதால் இந்தியர்கள் தங்களின் பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியிறுத்தியுள்ளது.
இந்தியர்கள் தங்களது தேவைக்கு இந்திய தூதரதகத்தை அணுகுவதற்கு 44255777, 55575086, 50536234, 55512810, 55532367 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் labour.doha@mea.gov.in என்ற இ-மெயில் மூலமாகவும் விவரங்கள் அறியலாம் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.