
உத்தரப்பிரதேசத்தில் பரம வைரிகள் எனக் கூறப்படும் சமாஜ்வாதிக் கட்சியும், பகுஜன்சமாஜ் கட்சியும், லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்டரிய ஜனதா தளம் நடத்தும் பேரணியில் ஓரணியில் திரண்டு கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன.
‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, பாரதிய ஜனதா கட்சி என்ற பொது எதிரியை வீழ்த்த இரு எதிர் துருவங்களும் ஓரணியில் திரள்வது, புதிய அரசியல் சமன்பாட்டை எழுத உள்ளது.
மகா பேரணி
இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் அசோக் சிங் நேற்று பாட்னாவில் நிருபர்களிடம் கூறியாதாவது-
வரும் ஆகஸ்ட் 27-ந்தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் லாலு பிரசாத் யாத்வ்தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி மிகப்பெரிய பேரணியை நடத்த உள்ளது. இந்த பேரணியில் எதிர்க்கட்சிகள் அனைவரையும் பங்கேற்க வைக்க லாலுதிட்டமிட்டுள்ளார். இதற்காக பல மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் கட்சிகளை ஓரணியில் அவர் ஒன்று திரட்டுகிறார்.
மாயாவதி-முலாயம்
இந்த பிரமாண்ட பேரணியில் பங்கேற்க ஏற்கனவே சமாஜ்வாதிக் கட்சித் தலைவர்அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். சமாஜ்வாதிக் கட்சியின் நிறுவனர் முலாயம்சிங்கையும் பங்கேற்க வைக்க அனைத்து முயற்சிகளையும் லாலு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முக்கியதலைவர்கள்
இந்த மகா பேரணியில் பங்கேற்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி, ஓடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தி.மு.க. காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின்
இதில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பங்கேற்பை உறுதி செய்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பங்கேற்பார் எனத் தெரிகிறது.
தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து பா.ஜனதா கட்சியை எதிர்க்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பா.ஜனாவுக்கு பின்னடைவு
உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா கட்சியின் எழுச்சி உருவாகி, வளர்ந்து வரும் நிலையில், எதிர் துருவங்களாக திகளும், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி,ஓரணியில் நின்று எதிர்ப்பது பா.ஜனதாவின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக மாறும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிலும், தலித், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகியோர் அதிகம் சார்ந்திருக்கும் இரு கட்சிகளும் பா.ஜனதாவை எதிர்க்கும் ஒரே நோக்கத்துக்காக திரளும்போது, அந்த கட்சிக்கு பெரிய பின்னடைவாக அமையும்.
எச்சரிக்கை
மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 21.8 சதவீத வாக்குகளையும்,சமாஜ்வாதி கட்சி 22.2 சதவீத வாக்குகளையும் கையில் வைத்து, இருவரும் ஒன்றாக களத்தில் இறங்குவது பா.ஜனதாவுக்கு சிறிது பின்னடைவாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமையலாம்.
30 ஆண்டுகளுக்குப்பின்
இதற்கு முன்பு, அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்த போது, கடந்த 1993ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் கூட்டாக தேர்தலைச் சந்தித்தன.
இதில், சமாஜ்வாதி கட்சி 256 இடங்களில் போட்டியிட்டு 109 இடங்களையும், பகுஜன்சமாஜ் கட்சி 164 இடங்களில் போட்டியிட்டு 67 இடங்களையும் கைப்பற்றியது. இதில்முலாயம்சிங் முதல்வராக பதவி ஏற்று ஆட்சி அமைத்தார்.
அதன்பின், 1995ம் ஆண்டு பாஜனதா கட்சி ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைத்த நிலையில் இப்போது அதே கட்சியை எதிர்க்கிறார்.
அதன்பின் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர் துருவங்களாக திகழ்ந்த இரு கட்சியினரும் இப்போது பா.ஜனதா என்ற பொது எதிரியை எதிர்க்க தயாராகிவிட்டனர்.