‘பசி பொருக்காமல்’ ரூ.66 ஆயிரத்தை மேய்ந்த ஆடு - அடேய் புல்லுக்கட்டு வாங்கித்தந்தா 2000 நோட்டை தின்பேனா?

First Published Jun 7, 2017, 4:36 PM IST
Highlights
Hungry goat chews up owner rs.66000


உத்தரப்பிரதேச மாநிலம், கன்னூஜ் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் வளர்த்த ஆடு ஒன்று, அவர் கால்சட்டை பாக்கெட்டில் வைத்து இருந்த ரூ.66 ஆயிரத்தை மென்று தின்று மேய்ந்ததால், அதிர்ச்சி அடைந்தார்.

ஆடு தின்ற அனைத்து ரூபாய்களும் 2 ஆயிரம் நோட்டுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடு கட்ட ரூ. 66ஆயிரம்

கன்னோஜ் மாவட்டம், சிலாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் குமார் பால். இவர் ஒரு ஆடு வளர்த்து வருகிறார். இவர் சொந்தமாக வீடு ஒன்றையும் கட்டி வருகிறார். அந்த வீட்டுக்கு செங்கல்கள் வாங்குவதற்காக ரூ. 66 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, தனது ஆட்டுடன் சென்றார். அந்த 66 ஆயிரம் ரூபாயும், ரூ.2 ஆயிரம் நோட்டுக்களாகும்.

குளிக்கச் சென்றார்

இந்நிலையில், ஒரு இடத்தில் ஆட்டைக் கட்டிப்போட்டு அருகில் தனது உடைகளை கழற்றிவைத்து குளிக்கச் சென்றார். ஆனால், பசியோடு இருந்த ஆடு, சர்வேஷ் குமார் பால் கால்சட்டையில் வைத்து இருந்த ரூ. 66 ஆயிரத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக தின்னத் தொடங்கியது. 

மென்று தின்றது

சர்வேஷ் குமார் குளித்துவிட்டு வந்து பார்க்கையில் ஆட்டின் வாயில் ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் இருப்பது கண்டு அதிர்ச்சிஅடைந்தார். இதைப்பார்த்த சர்வேஷ் குமார், அலறி, கத்தி கூப்பாடுபோட்டு அனைவரையும் அழைத்தார். தனது கால்சட்டையை பார்த்தபோது, ரூ.4 ஆயிரம் மட்டுமே மீதம் இருந்தது. அந்த நோட்டுகளும் ஆட்டின் பற்கள் பட்டு கிழிந்திருந்தது.

அதிர்ச்சி

ஆட்டின் வாயைப் பிடித்து பார்த்த போது ஆடு அனைத்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளையும் நன்றாக அசைபோட்டு மென்று தின்றுவிட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த சர்வேஷ் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார். 

மக்களின் ‘ஐடியா’

அதன்பின், அங்கு சுற்றி இருந்த மக்கள் பலரும் பலவாறு சர்வேஷ்க்கு ஐடியா கொடுத்தனர். ஆட்டின் வயிற்றை கிழித்துப் பார்க்கலாம் என்றும், ஆட்டுக்கு மருந்துகள் கொடுத்து அந்த நோட்டை வெளியேற்றிவிடலாம் என்றும், சிலரோ உச்சகட்டமாக ஆட்டை போலீசிடம் ஒப்படைத்து விடலாம் என்றும் தெரிவித்தனர். ஆனால், சர்வேஷ் அதற்கு மறுத்துவிட்டார்.

ஆட்டுடன் ‘செல்பி’

அதன்பின், அங்கு இருந்தவர்கள் ஆட்டின் முன் நின்று செல்பி எடுத்துக்கொண்டு சென்றனர்.

ஆடு என் குழந்தை

இது குறித்து சர்வேஷ் கூறுகையில், “ நான் குளித்துவிட்டு வருவதற்குள் என் கால்சட்டையில் வைத்து இருந்த ரூ.66ஆயிரத்தையும் நான் வளர்த்த ஆடு தின்றுவிட்டது. வீடுகட்ட செங்கல்வாங்க வைத்து இருந்தேன். என்ன செய்வது, என் செல்ல ஆடு எனக்கு குழந்தை போன்றது. அதை நான் என்ன செய்ய முடியும். பலரும் பல ஐடியா கொடுத்தார்கள். ஆனால், என் ஆட்டை நான் ஒன்றும் செய்ய மாட்டேன்’’ என்றார்.

ரூ.6 ஆயிரத்துக்கு விலைபோகக்கூடிய ஆடு, சிறிதுநேரத்தில்  ரூ. 66 ஆயிரத்துக்கு விலை உயர்ந்துவிட்டது...

click me!