பாபர் மசூதி இடிப்பு வழக்கு - அத்வானி, முரளி மனோகர்ஜோஷி, உமாபாரதிக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு….

First Published Jun 7, 2017, 2:25 PM IST
Highlights
babri Masjid demolition case Advani Joshi Uma Bharti exempted from appearance in court


லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில்அத்வானி, முரளி மனோகர்ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

அயோத்தியில் உள்ள பாபர்மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி கரசேவகர்களால் தகர்க்கப்பட்டது. பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தினை அடுத்து, நாடுமுழுவதும் நிகழ்ந்த கலவரத்தில், சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, அதனை இடித்த கரசேவகர்கள் மீதும், பாபர்மசூதி இடிப்புக்கான குற்றச்சதியில் ஈடுபட்டதாக எல்.கே.அத்வானி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீதும், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 21 பேரை கடந்த 2001ம் ஆண்டு அந்நீதிமன்றம் விடுவித்தது. 
இதனை அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு உறுதி செய்தது. இதனையடுத்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை 20 ஆண்டுகள் தாமதப்படுத்தியதற்கு சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்த வழக்கை ஒரே நீதிமன்றத்தில் விசாரித்து 2 வருடங்களுக்குள் முடிக்கவேண்டும் என உத்தரவிட்டது.
இதனையடுத்து லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அத்வானி, முரளி மனோகர்ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் நேரில் ஆஜராவதற்கு லக்னோ சிபிஐ நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. 
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தினசரி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!