
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறைச்சிக்காக பசுக்களை வெட்டினாலோ அல்லது கால்நடைகளை சட்டவிரோதமாக கடத்திச் சென்றாலோ அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்ப்பு-ஆதரவு
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யத் தடை விதித்து மத்தியஅரசுகொண்டு வந்துள்ள விதிமுறைக்கு நாடுமுழுவதும் தீவிர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆனால், பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் பசுவதை தடுப்புச்சட்டம், சட்டவிரோத கால்நடைக் கடத்தல் ஆகியவை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பசு பாதுகாவலர்கள்
அதிலும் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வலம் வரும் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் கால்நடைகளைக் கொண்டு செல்பவர்கள் மீது பசுப்பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சட்டத்தை கையில் எடுத்து செயல்படும் இவர்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை
இந்நிலையில், இறைச்சிக்காக பசுக்களை வெட்டுவோர், சட்டவிரோதமாக கால்நடைகளை கடத்திச் செல்வோர் மீது தேசியப்பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு முன் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி அரசில்கூட பசுவதை தடுப்புச் சட்டம் அமலில் இருந்தபோதிலும், அது தீவிரமாக அமல்படுத்தப்படாத நிலையில், பா.ஜனதா ஆட்சியில் இப்போது தீவிரமாகி உள்ளது.
மாநில, போலீஸ் டி.ஜி.பி. சுல்கான் சிங் நேற்று வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
தேசிய பாதுகாப்பு சட்டம்
மாநிலத்தில் பசுப் பாதுகாப்புச் சட்டம் கடந்த ஆட்சியில் ஏற்கனவே அமலில் இருந்தபோதிலும், அது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால், இப்போது, பசுக்களை கொன்றாலோ அல்லது சட்டவிரோதமாக கால்நடைகளை கடத்திச் சென்றாலோ அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தீவிர நடைமுறை
அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்கள், எஸ்.எஸ்.பி.க்கள் இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தி, சட்டவிரோத நடவடிக்கைகள் நடக்காமல் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் சட்டவிரோத செயல்களையும் தடுக்க வேண்டும்.
சட்டத்தை மீறுபவர்கள் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
சட்டத்தை கையில் எடுக்க கூடாது
மாடுகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டால், அது குறித்து பசுப்பாதுகாவலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாமேத் தவிர சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படக்கூடாது என்பதை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.