
தேர்வுகளில் முறைகேடு செய்வதால் பீகார் மாநிலத்தின் பெருமை சீரழியும் என்று அம்மாநில முதல் அமைச்சர் நிதிஷ் குமார் விமர்சித்துள்ளார்.
65 சதவீதம் தோல்வி
பீகாரில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பள்ளித் தேர்வில் முதலிடம் பிடிக்க முறைகேடு நடந்தது தெரிய வந்தது. கடும் கட்டுப்பாடுடன் தேர்வு நடத்தப்பட்டதால் 65 சதவீதம மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.
மறு திருத்தல் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கலைப்பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த மாணவர் கணேஷ் கைது செய்யப்பட்டது தொடர்பாக முதல் அமைச்சர் நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பீகாரிகளே காரணம்
அதற்கு அவர் பதில் அளிக்கையில் பீகார் மாநிலத்தின் பெருமையை சீரழிப்பதில் அம்மாநில மக்களே மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தவும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு முன்னெடுத்துள்ளது என்று பதிலளித்தார்.
அரசுக்கு பின்னடைவு
சமீபத்தில் பள்ளிக் கல்வித் தேர்வில் கலைப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவர் கணேஷ் குமார், அடிப்படைக் கேள்விகளுக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் திணறினார். 65 சதவீதம் பேர் தோல்வி அடைந்த இந்த தேர்வில் முதலிடம் பிடித்த கணேஷ் குமார் கைது செய்யப்பட்டார்.
பல லட்சக் கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பீகார் மாநில கல்வித் துறைக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.